Home நாடு சுங்கை சிப்புட் போராட்டத்திற்குத் தயாராகிறாரா தங்கராணி?

சுங்கை சிப்புட் போராட்டத்திற்குத் தயாராகிறாரா தங்கராணி?

1191
0
SHARE
Ad
டாக்டர் மைக்கல் ஜெயகுமார் – சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர்

சுங்கை சிப்புட் – பல்வேறு ஆரூடங்களுக்குப் பின்னர் இறுதியாக சுங்கை சிப்புட் தொகுதிக்கான வேட்பாளரை மஇகா தலைமைத்துவம் முடிவு செய்து விட்டதாகவும், பேராக் மகளிர் பகுதியின் தலைவி தங்கராணிதான் அந்த வேட்பாளர் என்றும் பேராக் மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தங்கராணி, சுங்கை சிப்புட் தொகுதிக்கு வருகை தந்து அங்குள்ள வாக்காளர்களைச் சந்தித்து வருகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2008, 2013 என இரண்டு பொதுத் தேர்தல்களிலும் மஇகா போட்டியிட்டு தோல்வி கண்ட தொகுதி சுங்கை சிப்புட் ஆகும். அந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும் மஇகா வேட்பாளர்களைத் தோற்கடித்தவர் பிஎஸ்எம் எனப்படும் பார்ட்டி சோஷலிஸ்ட் ராயாட் கட்சியைச் சேர்ந்த டாக்டர் மைக்கல் ஜெயகுமார்.

சுங்கை சிப்புட் – 2013 பொதுத் தேர்தல் முடிவுகள்
#TamilSchoolmychoice

இரண்டு பொதுத் தேர்தல்களிலும் பிகேஆர் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு சுங்கை சிப்புட் தொகுதியில் வென்றார் மைக்கல் ஜெயகுமார். கடந்த 2013 பொதுத் தேர்தலில், 2,793 வாக்குகள் வித்தியாசத்தில் சுங்கை சிப்புட் தொகுதியைக் கைப்பற்றிய இவர், எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் தொகுதியில் தனது கட்சியின் சொந்த சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார்.

எனினும், பக்காத்தான் கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிடும் நிலைமை உருவாகியிருக்கும் சூழலில், சுங்கை சிப்புட் தொகுதியை மைக்கல் ஜெயகுமாருக்கு விட்டுத் தரமுடியும் என்றும், ஆனால் அவரும் பிகேஆர் கட்சியின் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்றும் பிகேஆர் கட்சி வற்புறுத்தி வருகின்றது.

இந்த சூழலில்தான் தங்கராணி, சுங்கை சிப்புட்டில் போட்டியிடுகின்றார்.

தங்கராணியை வேட்பாளராக களமிறக்குவதன் மூலம் மஇகா மகளிர் பிரிவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் அதே தருணத்தில் நீண்ட காலமாக இழுபறியாக இருந்து வந்த சுங்கை சிப்புட்டுக்கான வேட்பாளர் தேர்வையும் மஇகா ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மைக்கல் ஜெயகுமார்

விடாப் பிடியாக மைக்கல் ஜெயகுமார் பிஎஸ்எம் சின்னத்திலேயே போட்டியிடுவேன் என இறுதிவரை உறுதியாக இருந்தால், அதன் காரணமாக சுங்கை சிப்புட் தொகுதியில் பிகேஆர் தனது சொந்த வேட்பாளரை நிறுத்தும் சூழ்நிலை ஏற்படும். அவ்வாறு தேசிய முன்னணி, பிகேஆர், பிஎஸ்எம் சார்பில் ஜெயகுமார் என மும்முனைப் போட்டி ஏற்பட்டால், மஇகா வேட்பாளருக்கான வெற்றி வாய்ப்புகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதி நேரத்தில், ஜெயகுமார் தனது உறுதியை விட்டுக் கொடுத்து விட்டு பிகேஆர் சின்னத்தில் போட்டியிடுவாரா?

அல்லது,

என்ன நடந்தாலும் பரவாயில்லை என பின்வாங்காது, பிஎஸ்எம் சின்னத்திலேயே சுங்கை சிப்புட்டில் போட்டியிடுவாரா?

ஜெயகுமாரின் முடிவைப் பொறுத்துத்தான் மஇகா வேட்பாளரான தங்கராணியின் வெற்றி வாய்ப்பும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-இரா.முத்தரசன்