
ஈப்போ : பேராக் மாநிலத்தின் கோலகங்சார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ இஸ்கந்தர் சுல்கர்னைன் அப்துல் காலிட், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார். இஸ்கந்தர் சுல்கர்னைன் பெர்சாத்து கட்சி – பெரிக்காத்தான் கூட்டணியைச் சேர்ந்தவராவார்.
அவரின் இந்த முடிவை அறிவிப்பதில் அவருக்குரிய காரணங்கள் இருக்க வேண்டும் என்று பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி முகமட் கூறுகிறார்.
தனது தொகுதி மக்கள் பாதிக்கப்படுவதை தான் விரும்பவில்லை எனவும் இஸ்கந்தர் சுல்கர்னைன் கூறியிருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதில் பக்காத்தான் ஹாரப்பான் – தேசிய முன்னணி இணைந்த ஒற்றுமை அரசாங்கம் நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதால் கோலகங்சார் நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதரவு முக்கியமானதாக கருதப்படுகிறது.
மூடா கட்சி ஒற்றுமை அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக் கொண்டதால் ஒற்றுமை அரசாங்கத்தின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை தற்போது 147 ஆக இருக்கிறது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு 148 ஆதரவாளர்கள் தேவை. எனினும் மூடா கட்சியின் தலைவர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் விவகாரத்தின் அடிப்படையில் ஒற்றுமை அரசாங்கத்திற்கு தரத் தயார் என அறிவித்திருக்கிறார்.