Home கலை உலகம் திரைவிமர்சனம்: மெர்குரி – இருக்கை நுனியில் அமர்ந்து பார்க்கும் மிரட்டலான திரைப்படம்!

திரைவிமர்சனம்: மெர்குரி – இருக்கை நுனியில் அமர்ந்து பார்க்கும் மிரட்டலான திரைப்படம்!

1509
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு முன்பாக, உலக அளவில் மெர்குரி தொழிற்சாலைகளின் மூலம் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அறிய வேண்டியது அவசியம். அப்போது தான் சொல்லப்படும் கதையை உங்களால் தொடர்பு படுத்திப் பார்க்க முடியும்.

மெர்குரி விஷம், குளிர் பிரதேசம், காதுகேட்க வாய்பேச முடியாத 5 நண்பர்கள், ஒரு கொடூர கொலைகாரன் இவ்வளவு தான் படத்தின் தொடர்புகள்.

ஆனால் இந்த ஒரு இணைப்பை வைத்து, படம் முழுவதும் ஒரு வசனம் கூட இல்லாமல், சைகை மொழியிலேயே,  இருக்கையின் நுனியில் அமர்ந்து நகங்களைக் கடித்துக் கொண்டு பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

#TamilSchoolmychoice

நடிப்பைப் பொறுத்தவரையில் பிரபுதேவா மிரட்டியிருக்கிறார். அந்த நீல நிறக் கண்களும், உடல்மொழியும் ப்பா… நடுங்க வைக்கிறார்.

அதேபோல், மாற்றுத்திறனாளிகளாக வரும் 5 நண்பர்களும் சைகையிலே அவ்வளவு அழகாக, கோபம், ஆச்சரியம், சந்தோஷம், அதிர்ச்சி, அச்சம் என அத்தனை உணர்வுகளையும் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

அதற்கேற்ப சந்தோஷ் நாராயணின் பின்னணி இசையும், எஸ்.திருவின் ஒளிப்பதிவும் படத்தை இன்னொரு பரிமாணத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

திருவின் ஒளிப்பதில் பாழடைந்த தொழிற்சாலையும், மலைப்பிரதேசமும் வெவ்வேறு மனநிலையை ஏற்படுத்துகின்றது.

காதல் காட்சியில் ஒன்றில் நிழலை காட்டி நம்மை வெகுவாகக் கவர்கிறார் ஒளிப்பதிவாளர் திரு.

திரைக்கதையைப் பொறுத்தவரையில், முதலில் மெதுவாக ஒரு வழக்கமான திரைப்படம் போல் தொடங்கி, ஒரு சம்பவத்திற்குப் பிறகு அப்படியே படுவேகம் எடுத்து இறுதி வரை சுவாரசியம் குறையாமல் நகர்கிறது.

படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இரண்டாம் பாதியில் பல ஆச்சரியங்களைக் கொடுத்து, இறுதியில் யாரும் எதிர்பார்த்திராத ஒரு முடிவை அமைத்திருக்கிறார் இயக்குநர்.

மெர்குரி பாதிப்போடு, காது கேட்காத, வாய் முடியாத மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினையை பொட்டில் அறைந்தார் போல் உணர வைத்திருக்கிறார் இயக்குநர்.

என்றாலும் கிளைமாக்ஸ் மட்டும் பல கேள்விகளை எழுப்புவதைத் தடுக்க முடியவில்லை.

எது எப்படியோ படம் பார்ப்பவர்கள் பயமும், ஒரு நல்ல படம் பார்த்த உணர்வோடும் திரும்புவது நிச்சயம். மெர்குரி நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

குறிப்பு: தமிழ்நாட்டில் தற்போது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் போராட்டம் நடைபெற்று வருவதால், தமிழ்நாட்டைத் தவிர மற்ற நாடுகளில் உள்ள ரசிகர்கள் மட்டுமே இத்திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-ஃபீனிக்ஸ்தாசன்