பிலாடெல்பியா – செவ்வாய்க்கிழமை டல்லாசை நோக்கிப் பறந்து கொண்டிருந்த சவுத்வெஸ்ட் விமானத்தின் ஒரு பக்க இயந்திரம் (எஞ்சின்) வெடித்ததில், அதிலிருந்து சிதறிய பாகம் சன்னல் அருகே அமர்ந்திருந்த பயணியைப் பதம் பார்த்தது.
இதில் படுகாயமடைந்த அப்பெண் பயணி சன்னலில் ஏற்பட்ட துளையில் சிக்கிக் கொண்டார். அவருக்கு அருகில் இருந்த பயணிகள் அப்பெண்ணை வெளியே எடுக்க முயற்சி செய்தும் முடியவில்லை எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், விமானத்திற்குள் வெளிக்காற்று புகுந்து விமானம் நடுவானில் தள்ளாடத் தொடங்கியது.
எனினும், பல போராட்டங்களுக்குப் பிறகு விமானத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த விமானி, பிலாடெல்பியா விமான நிலையத்தில் அவ்விமானத்தை அவசரமாகத் தரையிறக்கம் செய்தார்.
விமானம் ஓடுபாதையில் முரட்டுத்தனமாகத் தரையிறங்கியதால், விமானத்தில் இருந்த மேலும் 7 பேர் காயமடைந்தனர் என்றும் கூறப்படுகின்றது.
எனினும், படுகாயமடைந்திருந்த அப்பெண் பயணி அதிக இரத்தப் போக்கு காரணமாக உயிரிழந்துவிட்டதாக சவுத்வெஸ்ட் விமான நிறுவனம் அறிவித்திருக்கிறது.
எதிர்பாராமல் நடந்த இவ்விபத்து குறித்து வருத்தம் தெரிவித்திருக்கும் சவுத்வெஸ்ட் விமான நிறுவனம் மரணமடைந்த பயணியின் குடும்பத்தினரை இந்தக் கடினமான நேரத்தில் இருந்து மீண்டும் வர அனைத்து உதவிகளையும் செய்வதாக அறிவித்திருக்கிறது.