Home தேர்தல்-14 தொகுதி வலம்: காம்பீர் – மும்முனைப் போட்டியில் அசோஜன் மொகிதினை வீழ்த்த முடியுமா?

தொகுதி வலம்: காம்பீர் – மும்முனைப் போட்டியில் அசோஜன் மொகிதினை வீழ்த்த முடியுமா?

1501
0
SHARE
Ad

புக்கிட் காம்பீர் – அனைத்து மலேசியர்களின் பார்வையும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பதிந்திருக்கப் போகும் மாநிலம் ஜோகூர். ஆனால் ஜோகூர் மாநில மக்களின் பார்வை முழுக்க பதிந்திருக்கும் அந்த மாநிலத்தின் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான காம்பீர்,  ஆர்வத்துடனும், பரபரப்புடனும் அனைவராலும் பார்க்கப்படும் தொகுதிகளில் ஒன்று!

காரணம், முன்னாள் துணைப் பிரதமரும், பெர்சாத்து கட்சியின் தலைவருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் போட்டியிடத் தேர்ந்தெடுத்துள்ள சட்டமன்றத் தொகுதி காம்பீர்.

தங்காக், ஜாலான் சியாலாங் தமிழ்ப் பள்ளி போட்டி விளையாட்டுகளை அதிகாரபூர்வமாகத்தொடக்கி வைக்கிறார் அசோஜன்

செல்லியலின் ‘தொகுதி வலம்’ கட்டுரைத் தொடருக்காக காம்பீர் சட்டமன்றத் தொகுதியில் நுழைந்த போது தங்காக் நகரிலுள்ள ஜாலான் சியாலாங் தமிழ்ப் பள்ளி விளையாட்டுப் போட்டிகளை அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் (30 ஏப்ரல் 2018) கலந்து கொண்டிருந்தார் அசோஜன்.

#TamilSchoolmychoice

நான்காவது தவணைக்கு காம்பீர் சட்டமன்றத்திற்குத் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட மஇகா மீண்டும் தேர்ந்தெடுத்திருக்கும் வேட்பாளர்தான் அசோஜன்.

14-ஆண்டு கால சேவையை நம்பிப் போட்டியிடுகிறேன்

காம்பீர் தொகுதியில் ஏற்பட்டிருக்கும் போட்டி குறித்து, கருத்துரைத்த அசோஜன் நம்பிக்கையோடும், உறுதியோடும் பேசத் தொடங்கினார்.

“கடந்த 14 ஆண்டுகளாக, மூன்று பொதுத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று, 3 தவணைகளாக நான் வழங்கி வந்துள்ள சேவைகளின் அடிப்படையில் இங்கு என்னால் வெற்றி பெற முடியும்” என தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் அசோஜன்.

வழக்கமாகத் தான் போட்டியிட்டு வந்துள்ள பாகோ நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதோடு, கூடுதலாகப் போட்டியிட மொகிதின் யாசின் தேர்ந்தெடுத்திருக்கும் சட்டமன்றத் தொகுதிதான் காம்பீர்.

பாகோ நாடாளுமன்றத்திற்கு அடுத்துள்ள லெடாங் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான காம்பீரில் மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.

NEGERI JOHOR
DUN N.09 – GAMBIR
NAMA PADA KERTAS UNDI PARTI
DATUK M. ASOJAN BN
TAN SRI MUHYIDDIN YASSIN PKR
DATO DR MAHFODZ BIN MOHAMED PAS

 

தேசிய முன்னணி சார்பில் மஇகா வேட்பாளராக டத்தோ எம்.அசோஜன் போட்டியிட, அவரை எதிர்த்து மொகிதின் யாசினும் பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர் டத்தோ டாக்டர் மாபோட்ஸ் பின் முகமட்டும் போட்டியிடுகின்றனர்.

தனது பாகோ தொகுதிக்கு அருகில் இருக்கும் தொகுதி என்பது தவிர, கடந்த 2013 பொதுத் தேர்தலில் அசோஜன் 310 வாக்குகளில் மட்டும் வென்ற தொகுதி என்பதுதான் மொகிதின் இங்கு போட்டியிட முன்வந்திருப்பதன் நோக்கமாகத் தெரிகிறது. கடந்த பொதுத் தேர்தலில் குறைந்த பெரும்பான்மையில் தேசிய முன்னணி வென்ற தொகுதி காம்பீர் என்பதால், அங்கு தனது பிரபலம் மற்றும் செல்வாக்கால் வென்று விடலாம் என்ற முனைப்போடு களம் இறங்கியுள்ளார் மொகிதின்.

அதன் மூலம், ஜோகூர் மாநிலத்தை பக்காத்தான் கூட்டணி கைப்பற்றும் வியூகத் திட்டத்திற்கு தனது சார்பில் ஒரு சட்டமன்றத்தை வென்று, தனது பங்களிப்பை வழங்க எண்ணம் கொண்டிருக்கிறார் மொகிதின்.

அத்துடன், காம்பீர் தொகுதியில் வென்றால், மாநில மந்திரி பெசாராகப் பொறுப்பேற்கத் தகுதியுள்ள பக்காத்தான் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவராகவும் மொகிதின் தன்னை முன்னிறுத்தியுள்ளார்.

காம்பீரில் மொகிதின் எதிர்நோக்கும் சவால்கள்

ஆனால், இன்னொரு கோணத்தில் பார்த்தால், பக்காத்தான் கூட்டணி காம்பீர் தொகுதியைக் கைப்பற்றுவது அவ்வளவு எளிதல்ல என்பதை அங்குள்ள கள நிலவரங்கள் காட்டுகின்றன.

கடந்த 3 பொதுத் தேர்தல்களிலும் அசோஜன் பெற்று வந்திருக்கும் வாக்குகளின் எண்ணிக்கை சம அளவிலேயே இருந்து வருகின்றன. அதனை அவர் இந்த முறையும் தற்காத்துக் கொண்டாலே போதும் என்கின்றனர் அவருக்காக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஆதரவாளர்களில் சிலர்.

பாஸ் கட்சியின் வேட்பாளரும் சாதாரணமானவர் அல்லர்!

கடந்த 2013 பொதுத் தேர்தலிலும் இதே காம்பீர் தொகுதியில் போட்டியிட்ட அனுபவசாலி பாஸ் கட்சியின் வேட்பாளர் டாக்டர் மாபோட்ஸ் பின் மாஹ்முட். அதுமட்டுமல்ல! சக்தி வாய்ந்த பாஸ் உலாமாக் மன்றத்தின் தலைவரும்கூட!

காம்பீர் சட்டமன்றம் – 2008, 2013 பொதுத் தேர்தல் முடிவுகள்

எனவே, அப்படியே தேசிய முன்னணிக்கு எதிராக மலாய் வாக்குகள் பிளவுபட்டு பிரிந்தாலும், அந்த வாக்குகள் பக்காத்தான் கூட்டணி வேட்பாளருக்கு மட்டும்தான் போகும் என யாரும் அறுதியிட்டுக் கூறமுடியாது.

பிளவுபடும் மலாய் வாக்குகள் பாஸ் கட்சிக்கும் திசை மாறலாம்.பலம் வாய்ந்த-இஸ்லாமிய மதகுரு என்பதால் பாஸ் கட்சி வேட்பாளருக்கும் மலாய் வாக்காளர்கள் கணிசமாக வாக்களிக்கலாம்.

அப்படி நடந்தால், மலாய் வாக்குகள் காம்பீர் தொகுதியில் தேசிய முன்னணி, பாஸ், பக்காத்தான் என மூன்றாகப் பிளவுபட, தனது பழைய தேசிய முன்னணி வாக்கு வங்கியான – ஏறத்தாழ 8,000 வாக்குகளை – அசோஜன் அப்படியே மீண்டும் தக்க வைத்துக் கொண்டால்,

மொகிதின் யாசின் தனது பாகோ நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி கண்டு, புதிதாக நுழைந்த காம்பீர் சட்டமன்றத் தொகுதியில் பின்னடைவைச் சந்திக்கக் கூடிய அதிர்ச்சி தரும் நிலைமை ஏற்படலாம்.

-இரா.முத்தரசன்