
கோலாலம்பூர்: மஇகா தேசியத் துணைத் தலைவராக டத்தோஸ்ரீ எம்.சரவணன் இரண்டாவது தவணைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மஇகா பேராளர்கள், கிளைத் தலைவர்களின் கவனம் முழுவதும் தற்போது உதவித் தலைவர்கள் போட்டியின் மீது திரும்பியிருக்கிறது.
மஇகாவுக்கான கட்சித் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று சனிக்கிழமை (ஜூன் 22) மஇகா தலைமையகத்தில் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை நடைபெற்றது. 3 உதவித் தலைவர்களுக்கான போட்டியில் 4 பேர் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.
தற்போது முதலாவது உதவித் தலைவராக இருக்கும் டத்தோ டி.மோகன் மீண்டும் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். அவருக்கு வாக்குச் சீட்டு எண 1 கிடைத்தது.
டத்தோ நெல்சன் ரங்கநாதன், டத்தோ டி.முருகையா, டத்தோ எம்.அசோஜன் ஆகிய மூவரும் மற்ற உதவித் தலைவர் வேட்பாளர்களாவர்.
மஇகா தேசியத் தலைவராக டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார். இன்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலின்போது விக்னேஸ்வரன் தேர்தல் குழு தலைவராகச் செயல்பட்டார்.