Home நாடு மஇகா தேர்தல்கள் : மத்திய செயலவைக்கு 45 பேர் போட்டி!

மஇகா தேர்தல்கள் : மத்திய செயலவைக்கு 45 பேர் போட்டி!

136
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மஇகாவுக்கான கட்சித் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று சனிக்கிழமை (ஜூன் 22) மஇகா தலைமையகத்தில் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை நடைபெற்றது. 21 மத்திய செயலவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் 45 பேர் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அடுத்த 3 நாட்களுக்குள்ளாக போட்டியிலிருந்து விலகிக் கொள்ள விரும்புபவர்கள் தங்களின் வேட்புமனுக்களை மீட்டுக் கொள்ளலாம். ஒரு சிலர் மத்திய செயற்குழு போட்டியிலிருந்து விலகிக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்சியில் இல்லாவிட்டாலும், அமைச்சுப் பொறுப்புகள், அரசாங்கப் பதவிகள் எதுவும் இல்லாவிட்டாலும் மஇகா தேர்தல்களில் கிளைத் தலைவர்கள் காட்டியிருக்கும் ஆர்வம் ஆச்சரியப்பட வைக்கிறது.

#TamilSchoolmychoice

3 உதவித் தலைவர்களுக்கு நால்வர் போட்டி

இதற்கிடையில் மஇகாவின் 3 உதவித் தலைவர்களுக்கான போட்டியில் 4 பேர் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.

மஇகா தேசியத் துணைத் தலைவராக  டத்தோஸ்ரீ எம்.சரவணன் இரண்டாவது தவணைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மஇகா பேராளர்கள், கிளைத் தலைவர்களின் கவனம் முழுவதும் தற்போது உதவித் தலைவர்கள் போட்டியின் மீது திரும்பியிருக்கிறது.

தற்போது முதலாவது உதவித் தலைவராக இருக்கும் டத்தோ டி.மோகன் மீண்டும் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். அவருக்கு வாக்குச் சீட்டு எண 1 கிடைத்தது.

டத்தோ நெல்சன் ரங்கநாதன், டத்தோ டி.முருகையா, டத்தோ எம்.அசோஜன் ஆகிய மூவரும் மற்ற உதவித் தலைவர் வேட்பாளர்களாவர்.

மஇகா தேசியத் தலைவராக டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார். இன்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலின்போது விக்னேஸ்வரன் தேர்தல் குழு தலைவராகச் செயல்பட்டார்.