Home நாடு காம்பீர் சட்டமன்றத் தொகுதியில் மொகிதின் யாசின் போட்டியிட மாட்டார்

காம்பீர் சட்டமன்றத் தொகுதியில் மொகிதின் யாசின் போட்டியிட மாட்டார்

928
0
SHARE
Ad

ஜோகூர் பாரு : நடைபெறவிருக்கும் ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில், காம்பீர் சட்டமன்றத் தொகுதியில் மொகிதின் யாசின் மீண்டும் போட்டியிட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெர்சாத்து கட்சியின் தலைவருமான மொகிதின் யாசின், காம்பீர் சட்டமன்றத் தொகுதியைத் தற்காப்பதை விட, அதை இன்னொரு புதுமுகத்திடம் ஒப்படைத்துவிட்டு, கட்சியை வழிநடத்துவதிலும், தேசிய அளவிலான பிரச்சனைகளை முன்னெடுப்பதிலும் கவனம் செலுத்த விரும்புவதாக மொகிதின் தெரிவித்தார்.

எனினும் இறுதி முடிவு எடுப்பதை பெர்சாத்து கட்சியின் தலைமைத்துவத்திற்கே விட்டுவிடுவதாகவும் மொகிதின் தெரிவித்தார்.

2018-இல் மொகிதின் யாசின் வெற்றி பெற்ற காம்பீர் தொகுதி

#TamilSchoolmychoice

ம.இ.கா.வின் நடப்பு உதவித் தலைவரான டத்தோ அசோஜன் 2018 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதி காம்பீர். அதற்கு முன்னர் மூன்று தவணைகளாக காம்பீர் தொகுதியை வெற்றிகரமாக தற்காத்து வந்தார் அசோஜன்.

ஒரு தவணை மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

2018-இல் யாரும் எதிர்பாராத விதமாக பெர்சத்து கட்சியின் தலைவரும் பாகோ நாடாளுமன்ற உறுப்பினருமான டான்ஸ்ரீ மொஹிடின் யாசின் இங்கு போட்டியிட்டார்.

அப்போது பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு ஆதரவாக வீசிய அலையினால் ஜோகூர் மாநிலத்தையே அந்த கூட்டணி கைப்பற்றியது. அதன் காரணமாக காம்பீர் தொகுதியில் மொஹிடின் யாசினும் வெற்றி பெற்றார்.

2018 கணக்கெடுப்பின்படி 60 விழுக்காடு மலாய் வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதி காம்பீர். 37 விழுக்காடு சீன வாக்காளர்கள், 4 விழுக்காடு மட்டுமே இந்தியர்கள்.

அசோஜன் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா?

மொகிதின் ஒதுங்கிக் கொள்வதால் மீண்டும் இந்தத் தொகுதி ம.இ.கா.வுக்கு ஒதுக்கப்படுமா? அப்படி ஒதுக்கப்பட்டால் மீண்டும் அசோஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்புகளும் எழுந்திருக்கின்றன.

மொகிதின் யாசின் மீண்டும் இங்கு போட்டியிட முன்வந்தால் இந்தத் தொகுதிக்கு பதிலாக வேறொரு தொகுதியைப் பெற மஇகா தேசிய முன்னணியிடம் கோரிக்கை வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்தத் தொகுதியைத் தற்காக்கப்போவதில்லை என மொகிதின் அறிவித்திருப்பதால், மீண்டும் இந்தத் தொகுதி மஇகாவுக்கு ஒதுக்கப்படும் வாய்ப்புகளும் இருக்கின்றன.

காம்பீர் தொகுதியில் மஇகாவின் நடப்பு தலைமைச் செயலாளரும், வழக்கறிஞருமான டி.இராஜசேகர் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற ஆரூடங்களும் எழுந்திருக்கின்றன.

2018-இல் காம்பீர் தொகுதியை தக்கவைத்துக் கொள்வதில் அசோஜன் தோல்வியைத் தழுவினாலும் தொடர்ந்து ம.இ.கா.வின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியின் ம.இ.கா. ஒருங்கிணைப்பாளராகவும் அவர் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் அவர் காம்பீர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா அல்லது சிகாமாட் போன்ற நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிடுவதற்காக 15ஆவது பொதுத் தேர்தல்வரை காத்திருப்பாரா என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.

கடந்த ஜனவரி 22-இல் ஜோகூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டது. எதிர்வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி தேர்தல் ஆணையம் கூடி ஜோகூர் மாநிலத்திற்கான தேர்தல் தேதியை நிர்ணயிக்கும்.