கோலாலம்பூர் – நேற்று வியாழக்கிழமை மலேசியாவின் 7-வது பிரதமராகப் பதவியேற்ற துன் டாக்டர் மகாதீர் முகமது, பின்னர், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஷெரட்டன் தங்கும்விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அவருடன் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங், பெர்சாத்து தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் உள்ளிட்ட பக்காத்தான் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இச்சந்திப்பில் புதிய அரசாங்கம் குறித்தும், புதிய அமைச்சரவை குறித்து, நாட்டின் பொருளாதாரம் குறித்தும் பல்வேறு கேள்விகள் மகாதீரிடம் கேட்கப்பட்டன. அவற்றிற்கெல்லாம் ஒவ்வொன்றாக மகாதீர் பதிலளித்தார்.
அதில், அரசாங்கத்தில் தற்போது சில துறைகளில் இருக்கும் முக்கிய உயர்அதிகாரிகள் மாற்றப்படுவார்களா? என்ற கேள்விக்குப் பதிலளித்த மகாதீர், “நிச்சயமாக சில துறைகளில் மாற்றங்கள் கட்டாயம் இருக்கும். முந்தைய அரசாங்கத்தில் உள்ள கறைகளை அகற்றுவதற்கு இந்த நடவடிக்கை மிக முக்கியம். அதிகாரதுஷ்பிரயோகம் செய்த முந்தைய தலைமைத்துவத்திற்கு அவர்கள் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். சட்டத்தை மீறியிருந்தால் அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
“உள்நாட்டு வருவாய் வாரியம் மற்றும் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் உள்ளிட்ட துறைகளில் இருந்து சிலர் என்னை வந்து சந்தித்தனர். (முந்தைய அரசாங்கம்) தங்களிடம் கூடுதல் வரிகளை வசூலித்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.எனவே அவர்களுக்கு அப்பணத்தைத் திருப்பிக் கொடுப்பேன்” என்று மகாதீர் தெரிவித்தார்.
-ஃபீனிக்ஸ்தாசன்