புத்ரா ஜெயா – 1எம்டிபி என்றதுமே, அதில் சம்பந்தப்பட்ட அனைத்துமே மிகப் பிரம்மாண்டமான விவகாரங்களாகவே இருக்கின்றன.
இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பண ஊழல் நடந்திருப்பது ஒருபுறமிருக்க – அனைத்துலக அளவில் பல நாடுகள் இந்த ஊழல் விவகாரத்தில் தொடர்பு கொண்டிருப்பதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அதே வேளையில் நஜிப் தொடர்பு இல்லங்களில் கைப்பற்றப்பட்டிருக்கும் பணம், ஆபரணங்கள் அனைத்தும் 1 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
இத்தகைய பிரம்மாண்டங்களைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக இதுவரை இல்லாத அளவுக்கு சுமார் 400 பேர் 1எம்டிபி விவகாரம் தொடர்பாக விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றனர்.
இவர்களில் 4 பேர் டான்ஸ்ரீ அந்தஸ்து கொண்டவர்கள் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அம்னோ தலைவர்கள் அவர்களின் குடும்பத்தினரும் விசாரிக்கப்படுகின்றனர்.
இவர்கள் அனைவரும் 1எம்டிபி தொடர்பில் பணம் பெற்றிருப்பதாக நம்பப்படுகிறது.
4 டான்ஸ்ரீ அந்தஸ்து கொண்டவர்களில் ஒருவர் சரவாக் மாநிலத்தைச் சேர்ந்தவர் – நஜிப்புக்கு நெருக்கமானவர் என மலேசியாகினி தெரிவித்துள்ளது.
இன்னொரு டான்ஸ்ரீ நஜிப்புக்கு நெருக்கமான ஆலோசகர் என நம்பப்படுகிறது. கடந்த காலங்களில் நாட்டின் முக்கிய – மைய ஊடகங்களின் நிலைப்பாடு மீது ஆதிக்கம் செலுத்தியவர் – அந்த ஊடகங்களின் கருத்துகள் எப்படியிருக்க வேண்டும் என நிர்ணயித்தவர் இவர் என்றும் கூறப்படுகிறது.
மற்றொரு டான்ஸ்ரீ அரசாங்கத்தில் உயர் பதவி வகித்த ஒருவர் என்றும் இன்னொரு டான்ஸ்ரீ ஓர் அரசியல் தலைவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல் துறை, 1எம்டிபி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு ஆகியவை மேற்கொண்டுள்ள விசாரணைகள் தற்போது மிகப் பிரம்மாண்டமான அளவுக்கு விரிவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.