Home நாடு அம்னோ விவாதம் : வெற்றி பெற்றது யார்?

அம்னோ விவாதம் : வெற்றி பெற்றது யார்?

1157
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை நடைபெற்ற அம்னோ தேசியத் தலைவர் தேர்தல்கள் மீதான பொது விவாதத்தில் வென்றவர் யார் என்ற கேள்வியும், ஆர்வமும் இயல்பாகவே எழுகின்றது.

இந்த விவாதத்தில் நடப்பு தலைவருக்கான பொறுப்புகளை வகிக்கும் அகமட் சாஹிட் ஹமிடி, அவரை எதிர்த்துப் போட்டியிடும் துங்கு ரசாலி ஹம்சா மற்றும் கைரி ஜமாலுடின் ஆகிய மூவரும் கலந்து கொண்டனர்.

அஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சி அலைவரிசை இந்த நேரடி விவாதத்தை ஒளிபரப்பியது. டிவி 3 தொலைக்காட்சியும் இந்த விவாதத்தை நேரலையாக ஒளிபரப்பியது. சினார் ஹரியான் மலாய் நாளிதழ் இணைந்து இந்த விவாதத்தை ஏற்பாடு செய்திருந்தது.

#TamilSchoolmychoice

துங்கு ரசாலியும் கைரியும் நேருக்கு நேர் இந்த விவாதத்தில் கலந்து கொள்ள சாஹிட் ஹமிடி தனது நாடாளுமன்றத் தொகுதியான பாகான் டத்தோவில் இருந்து கலந்து கொண்டார்.

சனிக்கிழமை அம்னோ தலைவருக்கான தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் முன்னோட்டங்களும், ஆய்வுகளும் கைரி ஜமாலுடின்தான் வெல்வார் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.

அதே சமயம் இன்றைய விவாதத்தை நடுநிலையோடு பார்த்தவர்களுக்கு அந்த விவாதத்தில் வென்றவரும் கைரி ஜமாலுடின்தான் என்பது தெளிவாகப் புலப்படும்.

காரணம், பொது விவாதம் என்னும்போது அதற்கென சில இலக்கணங்கள் இருக்கின்றன. அந்த இலக்கணங்களின்படி அவற்றை முறையாகப் பின்பற்றி தொலைக்காட்சி வழி பார்த்துக் கொண்டிருந்த இரசிகர்களை அதிகம் ஈர்த்தவர் கைரிதான் என்பதில் ஐயமில்லை.

சாஹிட் ஹமிடி எப்படி பதிலளித்தார்?

முதலாவதாக, சாஹிட் ஹமிடி நேரடியாக விவாதத்தில் கலந்து கொள்ளாதது அவருக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

பல கேள்விகளுக்கு அவர் தொலைக்காட்சி இரசிகர்களை நேருக்கு நேர் பார்த்து பதில் சொல்லவில்லை. கீழே குனிந்து கொண்டு பதிலளித்தார். அவரது ஊடக ஆலோசகர்கள் இதுகுறித்து அவருக்கு முறையான ஆலோசனைகளை வழங்கத் தவறிவிட்டனர். இதன் காரணமாக அவரது விவாதமோ, தந்த பதில்களோ நம்மை ஈர்க்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.

துங்கு ரசாலி ஹம்சா, முன்னதாகவே, நான் இதுபோன்ற விவாதங்களுக்குப் புதியவன் – கைரி என்னை இந்த விவாதத்தில் வென்றுவிடுவார் – எனக் கூறிவிட்டார். அதற்கேற்ப அவர் அணிந்திருந்த ஆடைகள் – விவாத மேடையில் அமர்ந்திருந்த விதம் – பதிலளித்த விதம் – எல்லாமே இரசிகர்களை ஈர்க்கும் விதமாக இல்லை.

உதாரணமாக, அமெரிக்க அதிபர் பதவிக்கான போட்டிக்கு நடைபெறும் பொது விவாதங்களைப் பார்ப்பவர்களுக்கு இது போன்ற சில விவரங்கள் இயல்பாகவே புரியும்.

முதிர்ந்த அனுபவம் வாய்ந்தவன்தான் – ஆனால் 81-வது வயதில் அரசியல் பாதையில் அடிபட்டு, நீண்ட கால அரசியல் போராட்டத்தினால் தொய்வை அடைந்து விட்ட ஒரு தலைவன் நான் என்பது போல அமைந்திருந்தன துங்கு ரசாலியின் தோற்றமும் அவர் அளித்த பதில்களும் – அவர் தன்னைக் காட்டிக் கொண்ட விதமும்!

கைரி ஜமாலுடின் எப்படி?

இறுதியாக, கைரி ஜமாலுடின் – அவர் அணிந்திருந்த பளிச்சென்ற சிவப்பு நிற ஆடையும் – கம்பீரமாக அமர்ந்திருந்த விதமும் – ஒவ்வொரு கேள்விக்கும், ஒவ்வொரு விவகாரம் குறித்தும் அவர் தெளிவாகவும், நேரடியாகவும், சொற்களை மென்று விழுங்காமலும் அளித்த பதில்களும் இரசிகர்களைக் கவர்ந்தன.

ஆணித்தரமாக தனது கருத்துகளை கைரி முன் வைத்தார். அதே நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டிய இடத்தில் மன்னிப்பும் கேட்டார். தனது தவறுகளை உணர்ந்ததாகக் கூறினார். இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாமலிருக்க பார்த்துக் கொள்வேன் என உறுதி மொழி அளித்தார்.

இளைய சமுதாயத்திற்கு அதிக வாய்ப்புகள் தருவேன் – 30 விழுக்காடு பதவிகளில் பெண்களுக்கு வாய்ப்புகள் வழங்குவேன் – என அவர் வழங்கிய பதில்கள் நிச்சயம் அவருக்குக் கூடுதல் வாக்குகளை அம்னோ வாக்காளர்களிடையே குவித்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் படித்த காலத்தில் பல்வேறு பொது விவாதங்களில் பங்கெடுத்த அவரது அனுபவம் – பயிற்சி – இன்றைய பொது விவாதத்தில் நன்கு பிரதிபலித்தது.

அம்னோவின் தோல்வியால் தொய்வடைந்து – அந்தக கட்சியின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்றி சோர்ந்திருக்கும் அம்னோ கட்சியினருக்கு நம்பிக்கை நட்சத்திரமாக – விடிவெள்ளியாக – அம்னோவை மீட்டெடுக்க ஆற்றல் கொண்ட போராளியாக – இன்றைய விவாதத்தில் தன்னை முன்னிறுத்தி கைரி காட்டிக் கொண்டார்.

அம்னோவை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்லக் கூடிய இளைஞன் – பக்காத்தான் கூட்டணி அரசாங்கத்தின் மாபெரும் தலைவர்களை எதிர்கொண்டு விவாதிக்கவும் – போராடவும் – அரசியல் நடத்தவும் ஆற்றலும், வயதும் கொண்ட தலைவன் நான்தான் என்பதை எடுத்துக் காட்டுவதுபோல் இன்றைய விவாதத்தில் கைரி பிரகாசித்தார் என்றுதான் கூறவேண்டும்.

இன்றைய விவாதத்தைத் தொலைக்காட்சியில் பார்த்த அம்னோவினர் – அந்த விவாதத்தின் அடிப்படையில் – வாக்களிக்க முற்பட்டால் நிச்சயம் அவர்கள் கைரிக்குத்தான் வாக்களிப்பார்கள்.

அந்த வகையில் இன்றைய விவாதத்தில் வெற்றி பெற்றவர் கைரி ஜமாலுடின்தான் என்பதில் சந்தேகமில்லை!

இன்றைய விவாதத்தின் முடிவை – சனிக்கிழமை (30 ஜூன்) நடைபெறவிருக்கும் அம்னோ தேசியத் தலைவருக்கான தேர்தலிலும் அம்னோ வாக்காளர்கள் பிரதிபலிப்பார்களா?

கைரியை வெற்றி பெறச் செய்வார்களா?

-இரா.முத்தரசன்