Home நாடு அம்னோ விவாதம்: வெல்லப் போவது யார்?

அம்னோ விவாதம்: வெல்லப் போவது யார்?

843
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று வெள்ளிக்கிழமை (29 ஜூன் 29) இரவு 9.30 முதல் 10.30 மணி வரை நடைபெறவிருக்கும் அம்னோ தேசியத் தலைவருக்கான வேட்பாளர்களிடையிலான பொது விவாதம் எப்படியிருக்கும் – யார் இதில் வெற்றி பெறுவார்கள் – என்ற ஆர்வம் மலேசியர்களிடையே அதிகரித்து வருகிறது.

காரணம், இதுபோன்ற பொது விவாதம் நடைபெறுவது இதுதான் மலேசியாவில் முதன் முறை என்பதால், யார் வெற்றி பெறுவார்கள் – அதிலும் அம்னோ தேசியத் தலைவர் போட்டி நாளை சனிக்கிழமை நடைபெறவிருப்பதால் – யாருக்கு இந்த விவாதம் சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

நடப்பு அம்னோ தேசியத் தலைவர் பொறுப்புகளை வகித்து வரும் அகமட் சாஹிட் ஹமிடி, துங்கு ரசாலி ஹம்சா, நடப்பு அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் கைரி ஜமாலுடின் ஆகிய மூவரும் தேசியத் தலைவர் பதவிக்குக் குறிவைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இன்று நடைபெறும் பொது விவாதத்தை அஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சி தனது 501-வது அலைவரிசையில் நேரலையாக ஒளிபரப்புகிறது.

ஒட்டுமொத்த மலேசியர்களின் பார்வையும் இன்று இந்த விவாதத்தைக் காண தொலைக்காட்சியில் குவிந்திருக்கும்.

அதற்கேற்றாற்போல் இன்று உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளுக்கும் விடுமுறையாகும். நேற்று வரை பிரிவுகளுக்கிடையிலான (குரூப்) போட்டிகள் நடைபெற்று முடிந்து, இன்று அனைத்துக் குழுக்களுக்கும் விடுமுறையாகும்.

நாளை முதல் 16 நாடுகளைக் கொண்ட இரண்டாவது சுற்று தொடங்குகிறது.

எனவே, மலேசியர்கள் அனைவரையும் தொலைக்காட்சியின் வழி இந்த பொது விவாதம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவாதம் குறித்து இன்று கருத்துரைத்த துங்கு ரசாலி இதுபோன்ற விவாதங்களில் நான் அனுபவம் இல்லாதவன் என்பதால் என்னை கைரி எளிதாக வென்று விடுவார் என்று கூறியிருக்கிறார்.

இந்த விவாதத்தின் மையப் புள்ளிகள் துங்கு ரசாலியும் கைரி ஜமாலுடினும் ஆவர். இவர்கள் இருவருக்கும் இடையில் கோலாலம்பூரில் நடைபெறும் விவாதத்தில் தனது நாடாளுமன்றத் தொகுதியான பாகான் டத்தோவில் இருந்து மற்றொரு வேட்பாளரான சாஹிட் ஹமிடி இணைந்து கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.