Home கலை உலகம் திரைவிமர்சனம்: அசுரவதம் – விறுவிறுப்பான திரைக்கதை! இழப்பின் வலியை உணர்த்தும் படம்!

திரைவிமர்சனம்: அசுரவதம் – விறுவிறுப்பான திரைக்கதை! இழப்பின் வலியை உணர்த்தும் படம்!

1588
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சசிகுமார், நந்திதா என இரு பிரபலங்கள் நடித்திருந்தாலும் கூட எந்த ஒரு பெரிய விளம்பரமோ, அறிவிப்புகளோ இல்லாமல், கதையை மட்டும் நம்பி வெளியாகியிருக்கிறது புதுமுக இயக்குநர் மருதுபாண்டியன் இயக்கத்தில் ‘அசுரவதம்’ திரைப்படம்.

படம் தொடங்கியது முதல், வாடிப்பட்டி பெட்டிக்கடைக்காரர் ஒருவரை மர்மமான முறையில் துரத்தி சாவு பயம் காட்டிக் கொண்டே இருக்கிறார் சசிகுமார்.

சசிகுமார் யார்? சாமியா? பூதமா? பெட்டிக்கடைக்காரருக்கும், அவருக்கும் என்ன பிரச்சினை? எனத் தெரியாமல் நாமும் ஆர்வமாகப் படம் பார்க்கத் தொடங்குகின்றோம்.

#TamilSchoolmychoice

படம் பார்க்கும் ரசிகர்கள், சசிகுமார் யார்? என்று எந்த ஒரு கணிப்புக்கும் வந்துவிடக் கூடாது என்பதில் எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவும், கோவிந்த் மேனன் பின்னணி இசையும் கடுமையாக மெனக்கெட்டிருக்கிறது.பெண்கள் விஷயத்தில் பெட்டிக்கடைக்காரர் ஒருமாதிரி என்பது மட்டும் நமக்கு இயக்குநர் கொடுக்கும் குறிப்பு.

என்றாலும், சசிகுமாரின் கதாப்பாத்திரம் குறித்து முதல் பாதி வரையில் நம்மால் முழுமையாகக் கணிக்க முடியவில்லை. அதனாலே படத்தின் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் அதிகரிக்கிறது.

கதை இப்படி போய் கொண்டிருக்க உயிருக்கு பயந்து ஓடும் பெட்டிக்கடைக்காரர், தனது நண்பரான நமோ நாராயணின் உதவியை நாடுகிறார். அவர் ஒரு பெரிய கூட்டத்தையே அழைத்து வந்து இரவு முழுவதும் காவலுக்கு நிற்கிறார்கள். என்றாலும் சசிகுமார் அவர்களை விரட்டியடித்து மீண்டும் பெட்டிக்கடைக்காரருக்கு மரண பயம் காட்டுகிறார். அங்கு நடக்கும் காமெடியில் நாமும் சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிகின்றது.

இரண்டாம் பாதியில் கதை இன்னொரு பரிமாணத்தை அடைகின்றது. பெட்டிக்கடைக்காரரின் மனைவியை அவர் கண்முன்னேயே கடத்திக் கொடுமை செய்கிறார் சசிகுமார். அதைப் பார்த்து துடிதுடிக்கும் பெட்டிக்கடைக்காரர், போலீஸ்காரர் ஒருவரின் உதவியை நாடுகிறார்.

போலீஸ்காரர் விரிக்கும் வலையில் சசிக்குமார் சிக்குகிறாரா? சசிகுமார் உண்மையில் யார்? என்பதை கடைசியாக கிளைமாக்சில் தான் சொல்லியிருக்கிறார்கள். அதுவரையில் பெட்டிக்கடைக்காரர் போல், ரசிகர்களையும் கேள்வியுடனேயே வைத்திருக்கிறார் இயக்குநர். இயக்குநரின் இந்த யுத்தியே படத்திற்கு பலம் சேர்த்திருப்பதோடு, விறுவிறுப்பையும் கூட்டியிருக்கிறது.

படத்தின் கிளைமாக்சில் சொல்லப்படும் ஒரு விசயம் நிச்சயமாக ஒரு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதோடு, சசிகுமாரின் செயலில் உள்ள நியாயத்தையும் அசுரவதம் பெயர் காரணத்தையும் உணர முடியும்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நந்திதாவைப் பார்க்க முடிகின்றது. தனது கதாப்பாத்திரத்தை சிறப்பாக நடித்திருக்கிறார். நமோ நாராயணன் காமெடி ரசிக்க வைக்கின்றது.

“மச்சான்.. நான் ஒன்னு சொல்லட்டா.. பயப்படாதே”

“என் பாதுகாப்பு வளையத்த விட்டு போனது உன் தப்பு.. அவனையும் என் வளையத்த விட்டு தப்பிக்க வச்சதும் உன் தப்பு” என படத்தின் முக்கியக் காட்சியில் நமோ நாராயணன் அடிக்கும் பஞ்ச் சிரித்து ரசிக்க வைக்கின்றது.

அதேவேளையில், பெட்டிக்கடைக்காரராக நடித்திருக்கும் புதுமுகம் உண்மையில் சிறப்பான நடிப்பு. சசிகுமாரைப் பார்த்து பயந்து நடுங்குவதாகட்டும், உயிரை வெறுத்து ஓடுவதாகட்டும், மனைவியை ஏளனப்படுத்தி அடித்து நொறுக்குவதாகட்டும், நிஜத்தில் காட்டுமிராண்டி மனிதனின் சாயலை அப்படியே பிரதிபலித்திருக்கிறார். உண்மையில் தமிழுக்கு இன்னொரு அருமையான புதுவரவு.

இப்படியாக, விறுவிறு திரைக்கதையுடன் படம் நகர்ந்தாலும் கூட, சில இடங்களில் ஒரே மாதிரியான சசிகுமாரின் துரத்தல்கள் சற்று சலிப்பையும் ஏற்படுத்துகின்றது.

அதேபோல், பாம்பு ஒன்றைக் காட்டும் போது படத்தின் விஎப்எக்ஸ் செயற்கையாகத் தெரிகின்றது.

அதோடு, சில காட்சிகளில் படத்தொகுப்பு ரசிகர்கள் புரிந்து கொள்ள முடியாதபடி கத்தரி போட்டிருக்கிறார்கள்.

என்றாலும், பெண் குழந்தைகளைப் பெற்ற பெற்றோரின் பரிதவிப்பையும், வயிற்றில் நெருப்பைக்கட்டிக் கொண்டு அலையும் அவர்களது பயத்தின் காரணத்தையும் காட்சிப் படுத்திய இயக்குநரை நிச்சயம் பாராட்டித் தான் ஆக வேண்டும்.

மொத்தத்தில், ‘அசுரவதம்’ – விறுவிறுப்பான திரைக்கதை! இழப்பின் வலியை உணர்த்தும் படம்!

-ஃபீனிக்ஸ்தாசன்