சென்னை – எத்தனையோ போராட்டங்களால் தமிழகத்தையே நிலைகுத்தச் செய்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி, கடந்த சில நாட்களாக தனது உடல் நலக் குறைவால், மீண்டும் ஒரு முறை தமிழகத்தை நிலைகுத்தச் செய்து, தமிழக மக்களின் ஒட்டுமொத்தப் பார்வையையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல! அனைத்திந்திய அளவிலான தலைவர்களும், அண்டை மாநில முதல்வர்களும் அவரது உடல் நலம் குறித்து அக்கறையோடு விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து மருத்துவமனையின் சிகிச்சை பெற்று வரும் கலைஞர் குறித்த அண்மையத் தகவல்கள்:
- நேற்று சனிக்கிழமை பல தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து கலைஞரின் உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் அக்கறையோடு விசாரித்துச் சென்றனர். ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், துக்ளக் ஆசிரியரும், கணக்காய்வாளருமான குருமூர்த்தி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் அவர்களில் அடங்குவர்.
- இந்திய அதிபர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் ஸ்டாலினைத் தொடர்பு கொண்டு கலைஞரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.
- நடிகர் ரஜினி காந்தும் ஸ்டாலினை அழைத்து கலைஞரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
- கருணாநிதி உடல் நலம் குறித்துக் கருத்துரைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கலைஞரின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டால், தமிழக அரசு அவருக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும், மற்ற உதவிகளையும் வழங்கும் என உறுதியளித்தார். ஒரு முன்னாள் முதல்வர் என்ற முறையிலும், நீண்ட காலமாக திராவிடக் கட்சியான திமுகவின் தலைவராக இருந்தவர் என்ற முறையிலும், நடப்பு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் எனத் தெரிவித்தார்.
- இந்திய துணை அதிபர் வெங்கய்யா நாயுடு இன்று நேரடியாக சென்னைக்கு வந்து, கலைஞர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கருணாநிதிக்கு உயிர்காக்கும் கருவிகளின் துணையோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- கருணாநிதி சிகிச்சை பெற்றும் காவேரி மருத்துவமனை முன்பாக பலத்த காவல் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏராளமான தொண்டர்கள் இரவும் பகலுமாக மருத்துவமனை முன் சோகத்துடன் காத்திருக்கின்றனர்.