Home நாடு “சீனம், தமிழ் மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும்” – சீனாவில் மகாதீர்

“சீனம், தமிழ் மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும்” – சீனாவில் மகாதீர்

2021
0
SHARE
Ad
சீன அதிபர் ஜின் பெங்குடன் மகாதீர் தம்பதியர்

பெய்ஜிங் – சீனாவுக்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் துன் மகாதீர் மாறிவரும் நவீன காலச் சூழலுக்கு ஏற்ப அனைவரும் கூடுதல் மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பன்மொழித் திறனை நாம் கொண்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இளவயதில் மருத்துவராகப் பணியாற்றியபோது சீனர்களின் மொழிகளில் ஒன்றான ஹோக்கியன் மொழியைக் கொஞ்சம் கற்றுக் கொண்டு பேசியதாகவும் மகாதீர் விவரித்தார்.

“சீன மொழியைத் தெரிந்து கொள்வது உங்களுக்கு நல்லது. நான் மருத்துவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, எனது சீன நோயாளிகளிடம் ஹோக்கியன் மொழியில் நான் பேசுவேன்” எனவும் மகாதீர் கூறினார். பெய்ஜிங்கில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் சீனாவில் வாழும் சுமார் 500 மலேசிய சமூகத்தினரிடையே உரையாற்றும்போது மகாதீர் இவ்வாறு கூறினார்.

#TamilSchoolmychoice

மருத்துவராக தனது சீன மொழி பேசும் அனுபவங்களை அவர் விவரித்தபோது கூட்டத்தினர் அனைவரும் பலத்த கரவொலிகளோடு சிரிப்பில் ஆழ்ந்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் ஆங்கிலம், மலாய் மொழி தவிர மற்ற மொழிகளுக்கும் கல்வித் திட்டங்களை விரிவாக்குவது குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே மகாதீர் இவ்வாறு கூறினார்.

“காலச் சூழலுக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும். நீங்கள் சீனாவில் இருந்து கொண்டு மலாய் மொழியில் பேச முற்பட்டார்கள், கண்டிப்பாகக் கடைக்காரர்கள் புரிந்து கொள்ள முடியாது. எனவே, சீனாவில் இருக்கும்போது சீன மொழியை நீங்கள் கற்றுக் கொள்வது நல்லது” என்றார் அவர்.

தனது சீன வருகையின்போது சீன வணிகப் பிரமுகர்கள் விளக்கக் கூட்டங்களில் சரளமாக ஆங்கிலம் உரையாடியதையும் மகாதீர் சுட்டிக் காட்டினார். “ஆங்கிலம் உலக மொழியாகும். நீங்கள் ஜப்பான், சீனா, கொரியா என எங்கு சென்றாலும் ஆங்கிலம் தெரிந்திருப்பது உங்களுக்கு நிச்சயம் உதவும். ஆங்கிலம் தெரியாவிட்டால் நீங்கள் தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்படும்” என்றும் மகாதீர் தெரிவித்தார்.

ஒருவர் மூன்று மொழிகளில் புலமை பெற்றிருக்க வேண்டியதன் அவசியத்தையும் மகாதீர் வலியுறுத்தினார். ஒருவருக்கொருவர் மலாய் அல்லது ஆங்கில மொழியில் பேசிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் மகாதீர் எடுத்துரைத்தார்.

“குறிப்பாக, மலேசியாவில் நாம் உண்மையில் 3 மொழிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதலில் கண்டிப்பாக நமது தேசிய மொழியான மலாய் மொழியைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் மலேசியர்கள் நகர்ப்புறம் தொடங்கி கிராமங்கள் வரை அனைவரிடமும் கலந்துரையாட முடியும். அடுத்து கண்டிப்பாக ஆங்கிலத்தை நன்கு கற்றுக் கொள்ள வேண்டும். இது அனைத்துலக மொழியாகும். வெளிநாடுகளுக்கு செல்லும்போது நமக்கு ஆங்கிலம் பேருதவியாக இருக்கும். மூன்றாவதாக ஏதாவது ஒரு சீன மொழி அல்லது தமிழ் மொழியை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். மலேசியாவில் சீனர்களும் தமிழ் மொழி பேசுபவர்களும் அதிக அளவில் வாழ்கிறார்கள் என்பதையும் நாம் உணர வேண்டும்” என்ற மகாதீர்,

“பள்ளிகளில் எது மிகவும் பயன்தரக் கூடியதோ அதனை அமுல்படுத்த நாம் தீவிரமாகப் பாடுபட வேண்டும்” என்றும் மகாதீர் வலியுறுத்தினார்.

சீனாவுக்கான தனது வருகையின் ஒரு பகுதியாக மகாதீர் நேற்று சீன அதிபர் ஜின் பெங்குடன் சந்திப்பு நடத்தி, இருநாட்டு விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.

மகாதீருடன் அமைச்சர்கள் சைபுடின், சலாஹூடின் அயூப், தெரசா கோக்

(படங்கள்: நன்றி – துன் மகாதீர் இணைய அகப்பக்கம்)