மனாகுவா,ஜன.19- நிகாராகுவா நாட்டில் டி.வி.ஊழியர்கள் என்ற போர்வையில் போதை பொருள் கடத்திய, மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மெக்சிகோவில் இருந்து மத்திய அமெரிக்க நாடுகளுக்கு கடத்தப்படும் போதைப் பொருள் சம்பவங்களுக்கு தலைமையிடமாக நிகாரகுவா நாடு விளங்குகிறது. இதை தடுக்க இங்கு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மெக்சிகோவை சேர்ந்த ஒரு தனியார் டி.வி. ஊழியர்கள் சென்ற 6 வேன்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில், கோகைன் போதை பொருட்களும், பணமும் இருந்தன. எனவே, அவர்களை கைது செய்து விசாரணை நடத்திய போது, அவர்கள் உண்மையான டி.வி. ஊழியர்கள் அல்ல. போலியான பெயரில் நுழைந்து போதை பொருள் கடத்தல், பண மோசடி போன்றவற்றில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, இவர்கள் மீது மனாகுவா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட மெக்சிகோ நாட்டினர் 18 பேருக்கும் தலா 30 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்தது.