கோலாலம்பூர் – அஸ்ட்ரோவில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள எச்.டி எனப்படும் துல்லிய ஒளிபரப்பிலான 2 அலைவரிசைகளை வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 18 வரை இலவசமாகக் கண்டு களிக்கலாம்.
ஜீ தமிழ் எச்.டி (அலைவரிசை 232) மற்றும் கலர்ஸ் தமிழ் எச்டி (அலைவரிசை 233) ஆகிய இரண்டு அலைவரிசைகளும் நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த 2 அலைவரிசைகளிலும் திரைப்படங்கள், நாடகங்கள், ரியாலிட்டி ஷோ (reality show) எனப்படும் நிகழ்நேர நடப்பு நிகழ்ச்சிகள் மற்றும் தொடர் நாடகங்கள் போன்ற உள்ளடக்கங்களை தொலைக்காட்சி, அஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாக கண்டு களிக்கலாம்.

இந்த புதிய எச்.டி அலைவரிசைகளின் அறிமுக விழாவும், பத்திரிக்கையாளர்களுக்கான விளக்கக் கூட்டமும் நேற்று புதன்கிழமை அஸ்ட்ரோ நிறுவனத் தலைமையகத்தில் நடைபெற்றது.
அனைத்து அஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் இவ்விரு அலைவரிசைகளையும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 18 வரை எந்தவொரு கூடுதல் கட்டணமின்றி கண்டு மகிழலாம்.
அஸ்ட்ரோ இந்திய நிகழ்ச்சிகளின் குழுமத் தலைவர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து இதுகுறித்து கூறுகையில், “இந்தியாவில் மிகவும் பிரபலான அலைவரிசைகளான ஜீ தமிழ் எச்.டி (அலைவரிசை 232) மற்றும் கலர்ஸ் தமிழ் எச்.டி (அலைவரிசை 233) மலேசியாவில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். விரிவான தமிழ் நிகழ்ச்சிகளை வழங்கி வரும் அஸ்ட்ரோவின் சேவை தற்போது 89% மலேசிய இந்தியர்களின் வீடுகளில் ஊடுருவியுள்ளது. எங்கள் வாடிக்கையாளர்களின் பொழுதுபோக்குத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நாங்கள் தொடர்ந்து கடமைப் பட்டுள்ளோம்” என்றார்.

ஜீ தமிழ் எச்.டி அலைவரிசை 232-இல் பிரபல பாடகர்கள் கார்த்திக், சுஜாதா மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடுவர்களாகவும் தொகுப்பாளினி அர்ச்சனாவும் தொகுத்து வழங்கும் சிறுவர்களின் பாடல் திறன் போட்டி, சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன்-2, பிரபல நடிகைகள் சினேகா, பிரியாமணி மற்றும் கௌதமி ஆகியோர் நடுவர்களாக 12 ஜோடிகள் கலந்துகொண்டு தங்கள் நடனத் திறமையை வெளிப்படுத்தும் டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன்-2, காமெடி ரியாலிட்டி நிகழ்ச்சி காமெடி கில்லாடிஸ், ஷீலா ராஜ்குமார், பூவி, சுபாலக்ஷ்மி, அஞ்சூ அரவிந்த் உள்ளிட்ட பலர் நடிக்கும் அழகிய தமிழ் மகள், சரித்திரமும் காமெடியும் கலந்த தொடர் நாடகம் தென்னாலி ராமன், 10 தொலைக்காட்சி தம்பதியர்கள் பங்கெடுக்கும் Mr & Mrs கில்லாடிஸ் சீசன் 2, மற்றும் நடிகை பிரியராமன் தொகுத்து வழங்கும் ஜீன்ஸ் சீசன் 3 போன்ற நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கலாம்.

கலர்ஸ் தமிழ் எச்.டி (அலைவரிசை 233)-இல் தமிழ் நாடு மண் மணம் மாறாத தமிழ்த் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகின்றன. எடுத்துக்காட்டுக்கு, தம்பதியர்கள் பங்கெடுக்கும் கெம் ஷோ நம்ம ஊரு கலரு, வியக்கத்தக்க திறமைகளை கொண்ட குழந்தைகளை மையமாக வைத்து நடிகர் சிவா தொகுத்து வழங்கும் கலர்ஸ் சூப்பர் கிட்ஸ், வந்தாள் ஸ்ரீதேவி, பேரழகி, சிவகாமி, சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன், நாகினி 3, மறுபடியும் மற்றும் திருமணம் போன்ற தொடர் நாடகங்களைக் கண்டு மகிழலாம்.
எதிர்வரும் அக்டோபர் 19 தொடக்கம் ஜீ தமிழ் எச்.டி மற்றும் கலர்ஸ் தமிழ் எச்.டி அலைவரிசைகளைத் தொடர்ந்து கண்டு களிக்க சாம்ராட் பேக் எனப்படும் தொகுப்பிற்கான சந்தாதாரராக வேண்டும்.
• Astro Family Pack, Value Pack மற்றும் Starter Pack சந்தாதாரர்கள் மாதம் ரிம 10 செலுத்த வேண்டும்.
• Astro Super Pack மற்றும் Super Pack Lite சந்தாதாரர்கள் மாதம் ரிம 6 செலுத்த வேண்டும்.
• Astro Super Pack Plus சந்தாதாரர்கள் மாதம் ரிம 3 செலுத்த வேண்டும்.
மேல் விவரங்களுக்கு www.astroulagam.com.my/samrat அகப்பக்கத்தை வலம் வருங்கள்.