Home வணிகம்/தொழில் நுட்பம் நசிர் ரசாக் சிஐஎம்பி தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுகிறார்

நசிர் ரசாக் சிஐஎம்பி தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுகிறார்

1089
0
SHARE
Ad
நசிர் ரசாக் – கோப்புப் படம்

கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் இளைய சகோதரரும் நாட்டின் முன்னணி வங்கித் துறை நிபுணர்களில் ஒருவராகக் கருதப்படுபவருமான நசிர் ரசாக் சிஐஎம்பி வங்கிக் குழுமத்தின் தலைவர் பொறுப்பிலிருந்தும் அந்தக் குழுமத்தில் வகிக்கும் மற்ற பொறுப்புகளில் இருந்தும் எதிர்வரும் 31 டிசம்பர் 2018-இல் விலகுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிஐஎம்பி ஓர் அரசு சார்பு நிறுவனமாகும். நீண்ட காலமாக இந்த வங்கிக் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பிலும் பின்னர் தலைவர் பொறுப்பிலும் நீடித்து வந்த நசிர் ரசாக் தனது பதவிக் காலத்தின் போது சிஐஎம்பி வங்கிக் குழுமத்தை அனைத்துலக அளவிலும், வணிக ரீதியிலும் மிகப்பெரிய வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றார்.

எனினும், சிஐஎம்பி வங்கிக் குழுமத்தின் வளர்ச்சி நசிர் ரசாக்கின் திறமையால் வந்தது அல்ல மாறாக, அவரது தொடர்புகளாலும், பிரதமரின் தம்பி என்பதால் அவருக்குக் கிடைக்கும் சில வணிகத் தொடர்புகளாலும்தான் சாத்தியமானது என்ற மறைமுகக் குற்றச்சாட்டுகளும் அவ்வப்போது எழுந்து வந்தன.

#TamilSchoolmychoice

வேறு சில தரப்பினரோ, நஜிப்பின் தம்பி என்பதையும் தாண்டி, சிறந்த அறிவாற்றல் கொண்ட வங்கித் துறை நிபுணர் என அவரைப் பல தருணங்களில் பொருளாதார நிபுணர்கள் பாராட்டியிருப்பதை சுட்டிக் காட்டியிருக்கின்றனர்.

மே 9 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி அடைந்த மோசமான தோல்வியைத் தொடர்ந்தும், நஜிப் துன் ரசாக்கின் பதவி விலகலைத் தொடர்ந்தும், நசிர் ரசாக் தனது சிஐஎம்பி வங்கிப் பொறுப்புகளை விரைவில் துறப்பார் என்ற ஆரூடங்கள் கடந்த சில மாதங்களாகவே நிலவி வந்தன.