Home நாடு நசீர் அப்துல் ரசாக்: அரசியல் சார்பற்ற அமைப்பை உருவாக்குகிறார் – மாமன்னருக்குக் கடிதம்

நசீர் அப்துல் ரசாக்: அரசியல் சார்பற்ற அமைப்பை உருவாக்குகிறார் – மாமன்னருக்குக் கடிதம்

635
0
SHARE
Ad
நசீர் துன் அப்துல் ரசாக்

கோலாலம்பூர் : சிஐஎம்பி வங்கியின் முன்னாள் தலைவரும், நஜிப் துன் ரசாக்கின் இளைய சகோதரருமான நசீர் அப்துல் ரசாக் அரசியல் சார்பற்ற புதிய அமைப்பு ஒன்றை தேசிய அளவில் உருவாக்க மாமன்னருக்கும், ஆட்சியாளர்கள் மன்றத்திற்கும் கோரிக்கை விடுத்து கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

இந்த முயற்சியில் தன்னுடன் மேலும் 54 பிரமுகர்களை நசீர் அப்துல் ரசாக் இணைத்துக் கொண்டுள்ளார்.

இந்த அமைப்பின் மூலம் நாடு எதிர்நோக்கும் சவால்கள், பிரச்சனைகளைக் களைய நசீர் அப்துல் ரசாக் திட்டமிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

முன்னாள் வங்கியாளரான நசீர் அப்துல் ரசாக் கடந்த வருடத்தில் புரோஸ்டேட் கேன்சர் எனப்படும் ஆண்களுக்கான புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அறுவைச் சிகிச்சை, தொடர் சிகிச்சை மூலம் குணமடைந்த பின்னர், புரோஸ்டேட் கேன்சர் புற்றுநோய்க்கு எதிரான இயக்கத்தைத் தொடங்கி, அதன் மூலம் ஆண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்.

தற்போது இந்த புதிய இயக்கத்தையும் முன்மொழிந்துள்ளார்.

அடுத்தடுத்து பிரதமர்களாக வருபவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினாலும், அதைச் செயல்படுத்துவதில்லை எனவும் நசீர் அப்துல் ரசாக் மாமன்னருக்கு அனுப்பிய 29 அக்டோபர் தேதியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“மேலும் சிறந்த மலேசியாவுக்கான மன்றம்” எனும் பொருள்படும் “Better Malaysia Assembly” எனும் பெயரை இந்த அமைப்புக்கு சூட்டியுள்ளார் நசீர் அப்துல் ரசாக். இதன் மூலம் சீர்திருத்தங்களை முன்னெடுக்க அவர் பரிந்துரைத்துள்ளார்.

இந்தப் பரிந்துரைக்கான அனுமதியை மாமன்னரும், ஆட்சியாளர்கள் மன்றமும் வழங்கினால், அரசாங்கம், எதிர்கட்சிகள், முக்கிய அரசு சாரா அமைப்புகளுடன் அடுத்தக்கட்ட பணிகளைத் தொடக்க உத்தேசித்துள்ளதாகவும் நசீர் அப்துல் ரசாக் தெரிவித்திருக்கிறார்.

257-வது ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டத்திற்குப் பின்னர் நசீர் அப்துல் ரசாக்கின் கடிதம் ஊடகவியலாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

எனினும், இந்தக் கடிதம் குறித்து ஆட்சியாளர்கள் மன்றத்தில் விவாதிக்கப்பட்டதா என்பது தெரிவிக்கப்படவில்லை.