கோலாலம்பூர்: 1எம்டியிலிருந்து 25.7 மில்லியன் ரிங்கிட் பணத்தை கோரும் எம்ஏசிசி உடன் ஒத்துழைப்பதாக முன்னாள் சிஐஎம்பி குழுமத் தலைவர் நசிர் ரசாக் உறுதியளித்துள்ளார்.
அவர் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் தம்பியாவார்.
நேற்று செவ்வாய்க்கிழமை ஓர் அறிக்கையில், நஜிப் 2013-ஆம் ஆண்டில் தனது பெயரில் உள்ள வங்கிக் கணக்கிற்கு அந்நிதியை மாற்றியதாக அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
13-வது பொதுத் தேர்தல் பிரச்சாரத்திற்கு 25.7 மில்லியன் ரிங்கிட் பயன்படுத்தப்படும் என்பதை அவர் அறிந்திருந்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
இருப்பினும், அப்பணம் முறையானது என்று அறிவிக்கப்பட்டதாகக் கூறிய நசிர், அதனை அவர் வைத்திருக்கவோ அல்லது தனிப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தவோ இல்லை என்று வலியுறுத்தினார்.
“தேர்தல் பிரச்சாரத்திற்காக இந்த நிதி பின்னர் நஜிப்பின் பிரதிநிதிகளுக்கு ரொக்கமாக வெளியிடப்பட்டது. ஒரு சதவிகிதம் கூட நான் வைத்திருக்கவில்லை அல்லது பயன்படுத்தவில்லை. 13-வது பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் உதவி செய்ய எனது சகோதரர் (நஜிப்) கோரிக்கைகளை நிறைவேற்ற நான் நம்பிக்கையுடன் செயல்பட்டேன். அந்நேரத்தில், இந்த நிதி முறையான அரசியல் நிதியில் இருந்து வந்தது என்றும், வேறுவிதமாக சிந்திக்க எந்த காரணமும் இல்லை என்றும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.