கோலாலம்பூர்: வருகிற நவம்பர் 16-ஆம் தேதி நடைபெற இருக்கும் தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் மசீச போட்டியிட வேண்டுமென்று மஇகா விருப்பம் தெரிவித்துள்ளது.
அம்னோ அந்த தொகுதியை கைப்பற்ற நினைப்பது சரியானதாக இருக்காது எனவும், இதுகாறும் அம்னோவிற்கும் மசீசவிற்கும் இடையே உள்ள பரஸ்பர புரிந்துணர்வு பராமரிக்கப்பட வேண்டும் என்றும் மஇகா தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.
“மசீச வேட்பாளருக்கு பாஸ் கட்சி ஆதரிப்பதாக தனது நிலைப்பாட்டை ஏற்கனவே கூறியுள்ளது. பாஸ் உடனான ஒத்துழைப்பு, கூட்டணி கட்சிகளின் தொகுதிகளை கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்பதை அம்னோ நிரூபிக்க வேண்டும். காரணம் எதுவாக இருந்தாலும், மசீச வேட்பாளரை தேசிய முன்னணி தொடர்ந்து அத்தொகுதியில் நிறுத்த வேண்டும் என்று மஇகா விரும்புகிறது,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளர்கள் தேர்வு குறித்து விவாதிக்கப்படும் என்று தாம் நம்புவதாகவும் விக்னேஸ்வரன் கூறினார்.
மேலவை சபாநாயகருமான அவர் கூறுகையில், எதிர்க்கட்சி பல்வேறு இனங்கள் மற்றும் மதங்கள் மூலம் அரசாங்கத்தை வழிநடத்தும் திறன் கொண்டது என்பதை நிரூபிக்க தேசிய முன்னணி இவ்வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும் என்றார்.
இடைத்தேர்தலில், மசீசவின் பாரம்பரியமான தொகுதியை அம்னோவுக்கு விட்டுக் கொடுக்கும்படி அம்னோவிலிருந்து அழைப்புகள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.