கோலாலம்பூர் – நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் (30 செப்டம்பர்) மஇகா தலைமையகத்தின் நேதாஜி மண்டபத்தில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அமரர்கள் எம்.துரைராஜ், ஆதி.இராஜகுமாரன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்ச்சி அவர்கள் இருவருக்கும் நெருக்கமானவர்களும், அவர்களின் சேவைகளையும் பங்களிப்புகளையும் நன்கறிந்தவர்களும் அதனைப் பகிர்ந்து கொள்ளும் களமாக அமைந்தது.
துரைராஜ், இராஜகுமாரன் இருவருமே பத்திரிக்கைத் துறையில் பிதாமகர்களாகவும், பல்வேறு சாதனைகளைப் புரிந்தவர்களாகவும் கருதப்படுகின்றனர்.
துரைராஜ் பல ஆண்டுகள் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தேநீர் விருந்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் விஜயராணி வரவேற்புரை நிகழ்த்தினார்.
முரசு நெடுமாறன் வழங்கிய கவிதாஞ்சலி
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் எம்.துரைராஜ், ஆதி.இராஜகுமாரன் இருவரும் குறித்த நினைவஞ்சலிக் கவிதைகளை அவர்களுடன் நெருங்கிப் பழகிய கவிஞர் முரசு.நெடுமாறன் வாசித்தார்.
பின்னர் அவரது கவிதைகள் பாடல் வடிவமாக ஒலிபரப்பப்பட்டன. அதற்கான இசையமைப்பை அரசு நெடுமாறன் உருவாக்கியிருந்தார்.
டத்தோ வி.எல்.காந்தன்
தனது குடும்பத்தினரோடு நீண்ட காலம் தொடர்பு கொண்டிருந்த துரைராஜ் தனது அண்ணன் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் வீட்டிற்கு அடிக்கடி வருவார் என்றும், தமது அண்ணியார் (டான்ஸ்ரீ மாணிக்காவின் துணைவியார் கமலா) வைக்கும் கோழிக் குழம்புவைப் போல் எங்கும் சுவைத்ததில்லை எனப் புகழ்வார் என்றும் காந்தன் நினைவு கூர்ந்தார்.
துரைராஜ் எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்த காலத்தில் எழுத்தாளர்களுக்கான பதிப்புரிமை மற்றும் காப்புரிமை சட்டங்கள் மீதிலான கருத்தரங்கள் ஒன்றை நடத்தியதாகவும் காந்தன் மேலும் தெரிவித்தார்.
மலேசிய அரசியலமைப்புச் சட்டம் தமிழில் இல்லை என்பதை உணர்ந்து அதனை மொழியாக்கம் செய்ய அரசாங்கத்தின் சார்பில் தேசிய வழக்கறிஞர் மன்றம் தன்னை அணுகியபோது, அந்தப் பணியை மூன்றே வாரங்களில் செய்து முடித்தவர் துரைராஜ் என்றும் காந்தன் கூறினார்.
ஒரு குடும்ப உறவினரைப் போல் அவர் எங்கள் குடும்பத்தில் உலா வந்தார் என்றும் காந்தன் குறிப்பிட்டார்.
ஆதி.இராஜகுமாரனும் இறுதி வரை தன்னைப் பார்க்கும்போதெல்லாம் தன்னிடம் மிகவும் மரியாதையுடன் நடந்து கொண்ட பண்பாளர் என்றும் காந்தன் புகழாரம் சூட்டினார்.
அக்கினி சுகுமாரன்
இளவயது முதல் இராஜகுமாரனோடும், துரைராஜ் அவர்களுடன் பழகிய அனுபவங்களை அக்கினி சுகுமாரன் நகைச்சுவை ததும்ப பகிர்ந்து கொண்டார். இராஜகுமாரன் நன்றாகப் பாடக் கூடியவர் என்றும், தாங்கள் தனியாக இருக்கும் நேரங்களில் அவர் அழகாகப் பாடுவார் என்றும் கூடிய அக்கினி, ஆனால், அவரது இளைய சகோதரர் ஆதி.குமணன் வருவது தெரிந்தால் உடனே பாடலை நிறுத்தி விட்டு அமைதியாகி விடுவார் என்றும் நகைச்சுவையோடு கூறினார்.
கொண்ட கொள்கையில், கருத்துகளில் இறுதிவரையில் பிடிவாதத்தைக் கடைப்பிடித்த காரணத்தால் தங்களுக்குள் பல முரண்பாடுகள் இருந்தாலும், இறுதிவரையில் நெருங்கிய நட்பைக் கொண்டிருந்ததாக அக்கினி நினைவு கூர்ந்தார்.
நல்ல சிறுகதைகளையும், நாவல்களையும், கவிதைகளையும் எழுதும் வல்லமை வாய்ந்த இராஜகுமாரன் இருப்பினும் கொஞ்சமாகவே எழுதினார் என்றும் அக்கினி சுட்டிக்காட்டினார்.
அரசு நெடுமாறன்
இராஜகுமாரனோடு நெருங்கிப் பழகியவர்களில் ஒருவரான அரசு நெடுமாறன், தனது இசைக்கு இராஜகுமாரன் வடிவமைத்த பாடல்கள் உருவான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். சொற்களைத் தேர்ந்தெடுப்பதிலும், இசையமைப்பாளர் என்ற முறையில் தான் மாற்றித் தரச் சொன்ன சொற்களை உடனடியாகவும் பொருத்தமான முறையிலும் மாற்றித் தந்த போதும், அவரது தமிழ்ப் புலமையைத் தான் அறிந்து கொண்டதாகவும் அரசு விவரித்தார்.
தமிழ் நாட்டில் எடுக்கப்படும் தமிழ்ப் படம் ஒன்றுக்கு இசையமைக்க தனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டபோது, “ஒரு பாடலை நான் மலேசியப் பாடலாசிரியரை வைத்து உருவாக்குவேன்” என வாக்குறுதியைப் பெற்றதாகவும், அந்தப் பாடலை எழுதுவதற்கு தான் இராஜகுமாரனைத்தான் மனதில் வைத்திருந்ததாகவும், ஆனால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமலேயே அவர் மறைந்து விட்டார் என்றும் அரசு உருக்கமுடன் குறிப்பிட்டார்.
பெ.இராஜேந்திரன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர்
இராஜகுமாரன், துரைராஜ் இருவரின் ருசிகரமாகச் சாப்பிடும் உணவுப் பழக்கங்களையும் அதனால் ஏற்பட்ட அனுபவங்களையும் சுவைபட விவரித்த மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன், இராஜகுமாரனை தனது மூத்த சகோதரனாகவே கருதியதாகவும், தனது சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த சில துயரான, பிரச்சனைகளின் போது, இறுதிவரையில் துணை நின்று தோள் கொடுத்தவர் இராஜகுமாரன் என புகழாரம் சூட்டினார்.
எழுத்தாளர் சங்கத்தின் அறநிதி 40 ஆயிரமாக இருந்து, தனது பதவிக் காலத்தில் ஒரு இலட்சம் ரிங்கிட்டாக வளர்ச்சி கண்டு அதனை வங்கியில் வைப்புத் தொகையாக வைத்துவிட்டு அதற்கான இரசீதை துரைராஜ் அவர்களிடம் காட்டியபோது அவர் உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்தார் என்றும் இராஜேந்திரன் நினைவு கூர்ந்தார்.
அடுத்து: “இணையம் என்ற சொல்லைக் கண்டெடுத்தவர் – கணினி வழி அச்சிடுவதை மலேசியத் தமிழ் நாளிதழ்களில் முதன் முதலாகக் கொண்டுவந்தவர் இராஜகுமாரன்” – முத்து நெடுமாறன் நினைவஞ்சலி உரை