Home நாடு ஆதி.இராஜகுமாரனின் இரண்டு முக்கிய பங்களிப்புகள் – இரங்கல் உரையில் முத்து நெடுமாறன்

ஆதி.இராஜகுமாரனின் இரண்டு முக்கிய பங்களிப்புகள் – இரங்கல் உரையில் முத்து நெடுமாறன்

1240
0
SHARE
Ad

Rajakumaran Photo Featureகோலாலம்பூர் – (கடந்த 30 செப்டம்பர் 2018-ஆம் நாள் தலைநகர் மஇகா தலைமையகத்தின் நேதாஜி அரங்கத்தில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அமரர்கள் எம்.துரைராஜ்-ஆதி.இராஜகுமாரன் இருவருக்குமான நினைவேந்தல் நிகழ்ச்சியில் இரங்கல் உரையாற்றிய கணினித்துறை நிபுணர் முத்து நெடுமாறன் அவருடனான தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அவரது உரையின் சில பகுதிகள்…)

“ஆதி.இராஜகுமாரன் வழங்கிய இரண்டு முக்கிய பங்களிப்புகளை எனது அனுபவத்தின் வாயிலாக விவரிக்க விரும்புகிறேன்.

தமிழ் நாளிதழில் கணினி பயன்பாடு

முதலாவதாக மலேசிய நாட்டில் தமிழ் நாளிதழ்களில் கணினி பயன்பாட்டைக் கொண்டுவர முயற்சிகளை எடுத்தவரும், பழைய அச்சுக் கோர்ப்பு முறையிலிருந்து மாறி நவீனமயமாக கணினி மூலம் அச்சிடப்படும் தொழில்நுட்பத்தைக் கொண்டுவருவதற்கும் பாடுபட்டவர் இராஜகுமாரன். தமிழ் ஓசை பத்திரிக்கை வெளிவந்து கொண்டிருந்தபோது, அதன் ஆசிரியராக இருந்த இராஜகுமாரனின் இளைய சகோதரர் ஆதி.குமணனனிடம் என்னை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி, கணினி மூலம் தமிழ் மென்பொருளைப் பயன்படுத்தி அச்சிடலாம் என்ற பரிந்துரையை வலியுறுத்தினார்.”

முத்து நெடுமாறன்
#TamilSchoolmychoice

“அதைத் தொடர்ந்து, தமிழ் ஓசை நிர்வாக வாரியத்தின் தலைவராக இருந்த இரா.பாலகிருஷ்ணன் (முன்னாள் மலேசியத் தமிழ் வானொலியின் தலைவர்) தலைமையிலான குழுவினரிடம் அதுகுறித்த எனது பரிந்துரையையும் விளக்கங்களையும் வழங்கினேன். அதில் திருப்தியடைந்த அவர்கள் உடனடியாக செயல்படுத்துமாறும், அதற்குரிய செலவுகளைக் கூறும்படியும் தெரிவித்தனர். நானும் மிகுந்த உற்சாகத்துடன் எனது பரிந்துரையில் மேலும் பல திருத்தங்களைச் செய்து அதனைச் செயல்படுத்தினேன். கணினி மூலம் அச்சிடப்படும் நடைமுறையில் தமிழ் ஓசையும் வெளிவரத்தொடங்கியது.

அதற்கான முயற்சிகளை முன்னின்று எடுத்தவர், வித்திட்டவர் இராஜகுமாரன் என்பதை  இந்த வேளையில் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.”

“இணையம்” என்ற சொல்லைக் கண்டெடுத்தார்…

“இராஜகுமாரனின் இன்னொரு முக்கியப் பங்களிப்பு இண்டெர்னெட் என்ற சொல்லுக்கு தமிழ் மொழிபெயர்ப்பாக இணையம் என்ற சொல்லைக் கண்டெடுத்துக் கொடுத்தது. இதனை அவரது மறைவின்போதும் எனது இரங்கல் செய்தியில் தெரிவித்திருந்தேன். அந்த காலகட்டத்தில் அனைத்துலக அளவில் தமிழ் ஆர்வலர்களும், கணினி தொடர்புடையவர்களும் மின்னஞ்சல் வழியாக மடலாடற்  குழு ஒன்றின் மூலம் தொடர்பு கொண்டிருந்தோம். அந்தக் குழுவில் இராஜகுமாரனும் இடம் பெற்றிருந்தார். மலேசியாவிலிருந்து கரு.திருவரசு, ரெ.கார்த்திகேசு போன்றவர்களும் அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர். அப்போது வாட்ஸ்எப் போன்ற குறுஞ்செயலிகள் இல்லை என்பதால் மின்னஞ்சல் மூலமாகவே நாங்கள் கருத்துப் பரிமாற்றம் செய்ய முடிந்தது.

அப்போது இண்டர்னெட் அறிமுகப்படுத்தப்பட எல்லா மொழிகளிலும் அதனை இண்டர்னெட் என்றே அழைத்தார்கள். அந்த மடலாடற்குழுவில் இண்டர்னெட் என்பதற்கு ஒரு தமிழ் சொல்லைக் கண்டுபிடிக்க வேண்டும் என கருத்து தெரிவித்தேன். அதைத் தொடர்ந்து பல பரிந்துரைகள் பலரிடமிருந்தும் வரத் தொடங்கின. வையக விரிவுவலை, வலைப் பின்னல் என்பது போன்ற சொற்கள் பரிந்துரைக்கப்பட்டன. அப்போதுதான் இராஜகுமாரன் என்னை அழைத்து இணையம் என்ற சொல் பொருத்தமாக இருக்கும் எனப் பரிந்துரைத்தார். உடனே நான் உற்சாகமாகி, மிகச் சரியான மொழிபெயர்ப்பு என்று கூறி அவரையே அந்த செய்தியை மடலாடற்குழுவில் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டேன். ஆனால், அவரோ வழக்கம்போல், அதை நீங்களே போட்டு விடுங்கள் என்று தன்னடக்கத்துடன் கூறிவிட்டார். அதன் பின்னர் அந்த மடலாடற்குழுவில் இராஜகுமாரன் கண்டெடுத்த சொல் என்ற அறிமுகத்துடன் இணையம் என்ற சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கினோம். அதுவே பின்னர் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது, இன்றைக்கு அதிகாரபூர்வ சொல்லாகவும் உருவெடுத்துவிட்டது.”

“இந்த இடத்தில் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். உலகம் முழுவதிலும் எல்லா மொழிகளிலும் இண்டெர்னெட்டை, இண்டெர்னெட் என்றே அழைக்கிறார்கள். தமிழ் மொழியில் மட்டுமே அதனை மொழிமாற்றி இணையம் என்று அழைக்கிறோம்.

என்றென்றும் இராஜகுமாரனின் இந்த இரண்டு பங்களிப்புகளும் மலேசியத் தமிழ் உலகத்தால் நினைவுகூரப்படும்.”

  • மேற்கண்டவாறு முத்து நெடுமாறன் தனது இரங்கல் உரையில் தெரிவித்தார்.