Home One Line P1 மழைச்சாரல் 5-ஆம் ஆண்டு விழா – கே.பாலமுருகனுக்கு ‘ஆதி.இராஜகுமாரன் இலக்கிய விருது’

மழைச்சாரல் 5-ஆம் ஆண்டு விழா – கே.பாலமுருகனுக்கு ‘ஆதி.இராஜகுமாரன் இலக்கிய விருது’

1716
0
SHARE
Ad
பரிசு பெறும் கே.பாலமுருகன்

கோலாலம்பூர் – ஐந்தாம் ஆண்டாக மழைச்சாரல் இலக்கியக் குழு தேசிய அளவில் நடத்திய சிறுகதைப் போட்டியின் பரிசளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 15-ஆம்  நாளில் கோலாலம்பூர் கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் நடைபெற்றது. மலேசிய எழுத்தாளர்கள், வாசகர்கள், மழைச்சாரலின் இலக்கியக் குடும்பம் என்று நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கடந்த ஐந்தாண்டுகளாக மழைச்சாரல் தொடர்ந்து இலக்கிய வெளியில் அழுத்தமான தடத்தைப் பதித்துக் கொண்டு வருகிறது. எழுத்தாளர் வாணிஜெயம் அவர்களின் தலைமையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மழைச்சாரல் இலக்கியக் குழு இவ்வாண்டு ஆதி.ராஜகுமாரன் அவர்களின் ஆவணப்படத்தைத் தயாரித்து மக்களுக்குக் காண்பித்ததோடு இலக்கியத்தில் சிறப்பான பணிகள் செய்து கொண்டிருக்கும் ஓர் எழுத்தாளருக்கு ‘ஆதி.ராஜகுமாரன் இலக்கிய விருதை’ கொடுத்துக் கௌரவிக்கவும் செய்தது.

அவ்வகையில் 2019ஆம் ஆண்டுக்கான மழைச்சாரல் அறிமுகப்படுத்திய ஆதி.ராஜகுமாரன் இலக்கிய விருதை எழுத்தாளரும் ஆசிரியருமான கே.பாலமுருகன் அவர்கள் பெற்றார். சிங்கை எழுத்தாளர் எம்.சேகர் அவர்கள் பாலமுருகனுக்கு இவ்விருதை வழங்கிக் கௌரவித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த 14 ஆண்டுகளாக மலேசியத் தமிழிலக்கியத்தில் பல படைப்புகளைக் கொடுத்து மலேசிய இலக்கியம் உலகளவில் பெருமை பெரும் வகையில் இயங்கி வரும் கரிகாற்சோழன், எம்.ஏம்.இளஞ்செல்வன், சி.கமலநாதன், தனி நாயகர் தமிழ் நாயகர், பாரதி போன்றவர்களின் பெயர்களில் விருதுகளைப் பெற்ற கே.பாலமுருகனுக்கு மழைச்சாரல் குழு இவ்விருதை அளித்தது.

தொய்வடைந்து வரும் சிறுகதை துறைக்கு வளம் சேர்க்கும் வகையில் சாரல் கதைகள் எனும் தலைப்பில் மழைச்சாரல் நடத்திய தேசிய அளவிலான சிறுகதைப் போட்டியில் தேர்வான பத்துக் கதைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியீடு கண்டது. அவ்வகையில் மழைச்சாரல் நடத்திய சிறுகதைப் போட்டிக்கு எழுபதிற்கும் மேற்பட்ட கதைகள் வந்ததாக அவ்வமைப்பின் தலைவர் வாணிஜெயம் குறிப்பிட்டிருந்தார்.

சிறுகதைப் போட்டியில் இரு பிரிவுகளாக வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் நிலையில் கே.பாலமுருகன் எழுதிய காளி சிறுகதையும் நிலாவண்ணன் எழுதிய ‘சுனை’ சிறுகதையும் ஜி.எஸ்.தேவக்குமார் எழுதிய ‘தேடிய தலைப்பு இன்னும் கிடைக்கவில்லை’ ஆகியவைகள் பரிசு பெற்றன.

இரண்டாம் நிலையில் தயாஜி எழுதிய ‘இயற்கையின் கையசைப்பு’, மகேந்திரன் நவமணி எழுதிய ‘பச்சை வீட்டுப் புளிய மரத்துக் கிழவியும் புளிய மரமும்’, ந.தமிழ்ச்செல்வி எழுதிய ‘இற்று’, கோவி.மணிமாறன் எழுதிய ‘இருண்மை’, எஸ்.பி.பாமா எழுதிய ‘நீயும் வர்றீயா?’, திலிப் குமார் எழுதிய ‘கட்டையருக்கான கதைகள்’ மேலும் வே.இராஜேஸ்வரி எழுதிய ‘ஏழு கடல் ஏழு மலை தாண்டி’ போன்றவைகள் பரிசு பெற்றன.

வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு நற்சான்றிதழும் ஊக்கத்தொகையும் சாரல் கதைகள் ஐந்து பிரதிகளும் வழங்கப்பட்டன. மணிக்குமார், கோ.முனியாண்டி, மீராவாணி போன்றோர் பரிசுகளை எடுத்து வழங்கினர்.

மேலும், நிகழ்ச்சியில் எழுத்தாளர் கோ.புண்ணியவான், சிங்கை எழுத்தாளர் எம்.சேகர் ஆகியோர் இலக்கிய உரையை நிகழ்த்தினர். சிறுகதை பற்றியும் ஆதி.ராஜகுமாரனின் இலக்கியப் பரிசு அறிமுகம் பற்றியும் விளக்கப்பட்டன.

ஆலோசகர் உரையாற்றிய மழைச்சாரலின் ஆலோசகர் திரு.மன்னர் மன்னன் அவர்கள் மழைச்சாரலின் இலக்கிய முயற்சிகளைப் பாராட்டிப் பேசினார். இதுபோன்ற இலக்கிய முன்னெடுப்புகள் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாட்டிலிருந்து வருகையளித்திருந்த ‘உயிர் எழுத்து’ இதழின் ஆசிரியரும் கவிஞருமான திரு.சுதிர் செந்தில் அவர்கள் இச்சிறுகதைப் போட்டியின் தலைமை நடுவராகச் செயலாற்றியிருந்ததோடு நூலுக்கு விமர்சன உரையும் வழங்கியிருந்தார். நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகையில் போட்டிக்கு வந்த சிறுகதைகள் பற்றி தன் கருத்தைப் பதிவு செய்தார். மொழி ரீதியில் மேம்பட வேண்டிய அவசியத்தைக் கருத்துரைத்த அவர் பாலமுருகன் எழுதிய காளி சிறுகதையின் மொழிநடையையும் அக்கதை விரிவாக்கிக் காட்டும் வாழ்க்கை பற்றிய தத்துவ விசாரிப்பும் அருமையாக வெளிப்பட்டுள்ளதாகப் பாராட்டினார்.

மேலும், நிலாவண்ணன் எழுதிய சுனை சிறுகதை மிக முக்கியமான சிறுகதை என்றும் நிலாவண்ணன் அவர்களிடமிருந்து மேலும் பல நல்ல கதைகளை எதிர்பார்ப்பதாகவும் பாராட்டினார்.

தேவக்குமார் அவர்களின் கதை சுவாரசியமாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். மற்ற அனைவரையும் சிறுகதை எழுதியதற்காக வாழ்த்தியதோடு எழுத்து எழுத எழுத வசப்படும் என்றும் கூறினார்.

மலேசியாவில் கோ.புண்ணியவான், சை.பீர்முகமது, வாணிஜெயம், பாலமுருகன், தேவராஜன் போன்றோர் எழுதி உயிர் எழுத்து இதழில் கடந்த காலங்களில் பிரசுரமான சிறுகதைகள் தமிழ்நாட்டுக் கதைகளைக் காட்டிலும் சிறப்பாக இருந்ததைச் சுட்டிக் காட்டிய அவர் கடந்த சில ஆண்டுகளாக அதுபோன்ற படைப்புகள் மலேசியாவிலிருந்து உயிர் எழுத்து இதழுக்கு அனுப்பப்படவில்லை என்பதை வருத்ததோடு தெரிவித்துக் கொண்டார். இலக்கியம் கூர்மை பெற ஆரோக்கியமான சிற்றிதழ் உருவாக்கம் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அமரர் ஆதி.இராஜகுமாரன்

மேலும், நிகழ்ச்சியில் புதிய எழுத்தாளராக அறிமுகம் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் திலிப் குமார் அகிலன் அவர்களுக்கும் மழைச்சாரல் பரிசளித்துக் கௌரவித்தது. மழைச்சாரலின் இச்சிறுகதைப் போட்டி பல இளம் படைப்பாளிகளை ஊக்குவித்ததோடு அவர்களின் அறிமுகத்திற்கும் வழிகோலியது.

முதல் நிலையில் வெற்றிப் பெற்ற கே.பாலமுருகன், நிலாவண்ணன், தேவக்குமார் ஆகியோர் தங்களின் ஏற்புரைகளை வழங்கினர். பாலமுருகன் தனக்குச் சிறுவயதிலிருந்தே காடு மிக நெருக்கமான ஒன்றாக இருந்ததைக் குறிப்பிட்டார்.

மாலை 5.00 மணிக்கு நிறைவடைந்த அவ்விழாவில் சிறப்பம்சமாக திரு.ஆதி.ராஜகுமாரன் அவர்களின் சிறுகதைகளும் ஒரு நூலாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. தம் வாழ்நாள் முழுவதும் இலக்கியத்திற்காகக் கடுமையாக உழைத்த ஆதி.ராஜகுமாரன் எப்பொழுதும் நினைவு கூரப்பட வேண்டியவர் என்பதே இவ்விழாவின் கருப்பொருளாக அமைந்தது.