Home நாடு மூத்த எழுத்தாளர் வேலு இராம ரெட்டி காலமானார்!

மூத்த எழுத்தாளர் வேலு இராம ரெட்டி காலமானார்!

789
0
SHARE
Ad

கோல குபு பாரு – மலேசியாவின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான வேலு இராம ரெட்டி (வயது 71) நேற்று செவ்வாய்க்கிழமை 21 ஏப்ரல் 2020, பிற்பகல் 2 மணியளவில் உடல்நலக்குறைவால் காலமானார்.

தனது பதின்ம வயது முதல் கெடா பாடாங் செராயில் அமைந்துள்ள விக்டோரியா தோட்டத்தில், பல்வேறு பொறுப்புகளை வகித்த வேலு இராம ரெட்டி, தமிழ் மீதும், இலக்கியத்தின் மீதும் தனக்கு இருந்த தீவிர ஆர்வத்தின் காரணமாக, தனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தமிழ் நூல்கள், நாளிதழ்கள், வார இதழ்கள், வாசித்துத் தனது எழுத்தாற்றலை வளர்த்துக் கொண்டவர்.

தன்னை வளர்த்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், தனது தோட்டப்புறங்களில் இருக்கும் மாணவர்களுக்கு தினமும் பாடம் சொல்லிக் கொடுத்து அவர்கள் கல்வியில் சிறந்து விளங்கக் காரணமாக இருந்தார்.

#TamilSchoolmychoice

தொடர்ந்து பல ஆண்டுகளாக, மலேசியாவின் முன்னணி நாளிதழ்கள், வார இதழ்களில் கதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் என தொடர்ந்து எழுதி வாசகர்களின் பாராட்டுகளைப் பெற்றவர்.

மேலும், கடந்த சில ஆண்டுகளாக மழைச்சாரல் இலக்கியக் குழுமத்தில் தீவிரமாக இயங்கி வந்ததோடு, அதில் தனது இளமைக்கால அனுபவங்களை மிக சுவாரசியமான கட்டுரைகளாகப் பகிர்ந்து வந்தார். மழைச்சாரல் குழுமத்தால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் இலக்கிய  விழாக்களிலும் தவறாமல் கலந்து கொள்வார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வயது மூப்பின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சைப் பலனின்றி காலமானார்.