Home நாடு கே.பாலமுருகனின் புதிய முயற்சி – யு.பி.எஸ்.ஆர் கதாநாயகர்கள் அறிமுகம்

கே.பாலமுருகனின் புதிய முயற்சி – யு.பி.எஸ்.ஆர் கதாநாயகர்கள் அறிமுகம்

2096
0
SHARE
Ad
கே.பாலமுருகன்

கோலாலம்பூர் – நாடறிந்த எழுத்தாளர், ஆசிரியருமான கே.பாலமுருகன் கடந்த எட்டாண்டுகளாக மலேசியா முழுவதும் சென்று ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தமிழ்மொழியில் எழுத்தாற்றல் பயிற்சிகளை வழங்கி வருபவர் ஆவார். இதுவரை 22 தமிழ் நூல்கள் எழுதியிருக்கும் இவர் தற்போது மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக ‘யூ.பி.எஸ்.ஆர் ஸ்டார்’ திட்டத்தைத் தொடங்கி அவருடைய அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தின் வாயிலாக அங்கீகாரம் வழங்க முன்வந்துள்ளார்.

‘அவர்களும் கதாநாயகர்களே’ என்கிற முழக்கத்துடன் நேற்று தொடங்கிய இத்திட்டத்தின் வாயிலாக, யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் ‘ஏ’க்கள் பெற முடியவில்லை என்று துவண்டுவிட்டிருக்கும் மாணாக்கர்களை அடையாளம் கண்டு; அவர்களின் முயற்சியை ஊக்குவிக்க வேண்டும் என்பதே அவருடைய நோக்கம் என்று தெரியப்படுத்தினார்.

‘களத்தில் யாரும் தோல்வியுற்றவர்கள் அல்லர்; வெற்றி என்பது கோப்பையைத் தூக்குபவன் கையில் மட்டும் அல்ல; எதிர்த்துப் போட்டியிட்டவன் கொடுத்த கடுமையான சவாலும்கூட காரணமாக அமையலாம். ஆகவே, இங்கு யாரும் தோற்கவில்லை. வெற்றி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. உம் முயற்சியில் நீ பலனைக் கண்டாய். எழுந்து வாருங்கள்; நம் பயணம் இன்னும் முடியவில்லை. உங்கள் வீட்டிலும் இதுபோன்ற தன் நன்முயற்சிகளால் நல்ல தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் உள்ளார்களா?

#TamilSchoolmychoice

உடனே முகநூல் வாயிலாகத் தொடர்பு கொள்ளவும்.

அவர்களைக் கதாநாயகர்களாக மாற்ற நான் தயார் என, Bahasa Tamil UPSR Balamurugan, Facebook’ என்று தன் முகநூலில் தெரியப்படுத்தியுள்ளார் பாலமுருகன்.

‘தமிழ் நாயகர்’, ‘பாரதி விருது’ போன்ற அங்கீகாரங்களைத் தமிழ் நாட்டில் பெற்றவர் எழுத்தாளர் கே.பாலமுருகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

8ஏ பெற்ற மாணவர்களைக் கொண்டாட அவர்களின் வெற்றியைப் பற்றிய செய்தியை வெளியிட பல ஊடகங்கள் உள்ளன. ஆனால், தன் நிலையிலிருந்து சுயமுயற்சியால் முன்னேறி வந்திருக்கும், ‘ஏ’ பெற முடியாவிட்டாலும் நல்ல தேர்ச்சிப் பெற்றிருக்கும் மாணவர்களைக் கவனப்படுத்த யாரும் முன்வந்ததில்லை என்பதே வருத்தமான செய்தியாகும்.

இதுபோன்ற மாணவர்களை நேர்காணல் செய்ய சென்றபோது அவர்களின் பெற்றோர்களே கொஞ்சம் தயக்கம் காட்டியதற்குப் பின்னால் இதுவரை இச்சமூகம் வெற்றி என்பதை ‘ஏ’ என்பதோடு நிறுவி விட்ட அவலத்தையே காட்டுவதாக அவர் மேலும் செல்லியல் ஊடகத்திடம் தெரிவித்தார்.

இது காலத்தால் எப்பொழுதுமே நினைவுக் கூரப்படும் முயற்சியாக இருக்கும். உங்கள் வீட்டிலும் இதுபோன்ற மாணவர்களைப் பாராட்ட மறந்திருக்கலாம்; அவர்கள் அங்கீகரிக்கப்படவில்லை என்று வருந்தியிருக்கலாம்; அவர்களின் மீது சமூக வெளிச்சம் பாயவில்லை என்று கவலைப்பட்டிருக்கலாம். அதற்கெல்லாம் ‘யு.பி.எஸ்.ஆர் ஸ்டார்’ திட்டம் புதிய வரலாறைப் படைக்கும் என்பதில் ஐயமில்லை.

உங்கள் மாணவர்கள்/பிள்ளைகளின் தகவல்களை ஆசிரியர் கே.பாலமுருகனிடன் தெரியப்படுத்தலாம். அவருடைய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான ‘Bahasa Tamil Upsr Balamurugan’ என்கிற முகநூலில் தொடர்பு கொள்ளவும்.