Home நாடு மாபெரும் சிறுவர் சிறுகதை இலக்கிய விழா – வரலாற்றில் புதிய துவக்கம்

மாபெரும் சிறுவர் சிறுகதை இலக்கிய விழா – வரலாற்றில் புதிய துவக்கம்

3321
0
SHARE
Ad

ஆசிரியரும் எழுத்தாளருமான திரு.கே.பாலமுருகன் (படம்) கடந்த எட்டாண்டுகளாக மலேசியா முழுவதுமுள்ள பல தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குத் தொடர்ந்து சிறுவர் சிறுகதைப் பட்டறைகள், பயிற்சி விளக்கங்கள், வழிகாட்டி நூல்கள் என அயராமல் இயங்கிக் கொண்டே இருக்கின்றார்.

அவருடைய ‘மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்’ என்கிற சிறுவர் மர்ம நாவல் மலேசியத் தமிழிலக்கியத்தில் பதிவான சிறுவர்களுக்கான முதல் நாவல் என்று தேர்வு வாரியத்தின் மேனாள் உதவி இயக்குனர் திரு.பி.எம் மூர்த்தி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

பாலமுருகனின் சிறுவர் இலக்கிய முயற்சிகள் உலகம் முழுவதும் பரவி, அண்மையில் அவருக்கு அன்னை வேளாங்கன்னி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ‘தனி நாயகர் – தமிழ் நாயகர்’ விருதை அளித்துக் கௌரவித்தது. இப்பொழுது மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய ரீதியில் அவர் நடத்திய சிறுவர் சிறுகதை எழுதும் போட்டி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது எனலாம். கே.பாலமுருகன் மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் தொடர்பாக அவரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் இது:

#TamilSchoolmychoice

கேள்வி: எப்பொழுது நீங்கள் சிறுவர் இலக்கியம் படைக்கத் துவங்கினீர்கள்? ஏன்?

கே.பாலமுருகன்: நான் 2005ஆம் ஆண்டு தொடங்கி கல்லூரியில் பயிலும்போது எழுதத் துவங்கினேன். பின்னர், மலேசியாவில் நடந்த பல இலக்கியப் போட்டிகளில் சிறப்புப் பரிசுகள் பெற்ற என் படைப்புகளுக்கு வாசகக் கவனம் கிடைத்தது. பின்னர், நவீன இலக்கியம் படைப்பதில் ஆர்வம் கொண்டேன். எனது முதல் நாவலான ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ‘கரிகாற் சோழன்’ விருதை வென்று என்னை மேலும் தமிழ் இலக்கியத்தின் மைய நீரோட்டத்திற்குள் இணைத்தது என்றே சொல்லலாம்.

பிறகு, நவீன இலக்கியம் குறித்த சர்ச்சைகள், விவாதங்கள் என்று எனது சில வருடங்களை நான் வீணடித்துக் கொண்டிருந்தபோதுதான் எனக்கு திரு.பி.எம்.மூர்த்தி அவர்களிடமிருந்து கல்வி அமைச்சு ரீதியில் அழைப்பு வந்தது. அவர் என்னைச் சில வருடங்களாகக் கூர்ந்து கவனித்துக் கல்வித்துறையின் இலக்கியப் பகுதிகளுக்காகப் பணியாற்ற வரவழைத்துப் பல மணி நேரங்கள் அவருடைய திட்டங்கள் பற்றிப் பேசினார். சிறுவர் இலக்கியம் வளர வேண்டியதன் அவசியங்களை அயராமல் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். கல்வி அமைச்சுக் கூட்டங்களுக்குப் பின்னரும் எங்களின் நட்புத் தொடர்ந்தது. அவருடைய உந்துதல்தான் நான் சிறுவர் சிறுகதைகள் தொடர்பாக கவனம் செலுத்தத் தொடங்கினேன். அங்கிருந்துதான் அவருடைய நீண்ட நாள் ஆசையை என் சிறுவர் மர்ம நாவலின் மூலம் நிறைவேற்றினேன்.

கேள்வி: ஆரம்பக் காலங்களில் சிறுவர் இலக்கியம் மலேசியாவில் எப்படி இருந்தது?

பதில்: 2005ஆம் ஆண்டு மலேசியத் தேர்வுகளில் குறிப்பாக தமிழ்மொழிப் பரீட்சையில் சிறுகதை, கவிதை, நாவல் என்று மறுசீரமைப்புச் செய்யப்படும்வரை கல்வித்துறை சிறுவர்களுக்கான இலக்கியங்களைப் பெரிதாகக் கவனத்தில் கொள்ளவில்லை. திரு.பி.எம். மூர்த்தி கல்வித்துறையில் இலக்கியத்தைக் கட்டாயமாக்கியதன் பின்னரே அனைவரும் சிறுவர் சிறுகதைகள், இளையோர் நாவல்கள் என்று விரிவான தேடலுக்கும் பயிற்சிக்கும் உள்ளாக்கப்பட்டோம்.

அதற்கு முன்னர் என்றாலும் சிறுவர்களுக்கான பாடல்கள், கவிதைகள் என்று நிறையவே மலேசியாவில் உருவாகியுள்ளன. குறிப்பாக ஐயா முரசு நெடுமாறன் குழந்தைகளுக்கான கவிதைகள், பாடல்கள் இயற்றுவதில் கைத்தேர்ந்தவராக இருந்துள்ளார். ஆனால், 2005ஆம் ஆண்டிற்குப் பின்னர் சிறுவர் சிறுகதை அறிமுகமானதும் மலேசிய சிறுவர் இலக்கியத்தில் ஒரு புதிய பாய்ச்சல் ஏற்பட்டது என்றே சொல்லலாம்.

கேள்வி: சிறுவர் இலக்கியம் இத்தனை கவனம் பெறுவதற்குரிய அவசியம் என்ன?

பதில்: இந்நாட்டில் அடுத்த தலைமுறையில் புதிய எழுத்தாளர்களை உருவாக்கிடவே சிறுகதை இலக்கியம் தமிழ் தேர்வுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. நல்ல இலக்கிய வாசிப்பைச் சமூகத்தில் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடே அனைவரும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இலக்கியம் குறித்த தேடல் குறைந்து வரும் ஒரு காலக்கட்டத்தில் சிறுவர் இலக்கியம் மலேசியத் தேர்வில் குறிப்பிடத்தக்க முக்கியத்தும் பெற்ற போதே நாட்டிலுள்ள பலரும் இலக்கியம் பக்கம் திரும்பினர். மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்க்கவும் எழுத்தாற்றலை மேம்படுத்தவும் சிறுவர் இலக்கியம் ஒரு மொழியில் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

கேள்வி: தேசிய அளவில் நடத்தப்பட்ட மாணவர்களுக்கான சிறுகதை எழுதும் போட்டியை எப்படித் திட்டமிட்டீர்கள்?

பதில்: மாணவர்களுக்கான தேர்வில் சிறுகதை எழுதும் பகுதி இடம்பெற்றிருப்பதால் படைப்பாற்றல் மிக்க சிறுகதைகளை ஊக்குவிக்க வேண்டிய கடப்பாடும் உள்ளது. நல்ல ஆக்கத்திறன் மிக்க படைப்புகளே சிறந்த மதிப்பீடுகளுக்கு உள்ளாக்கப்படும். ஆகவே, எது சிறந்த படைப்பாற்றல் என்பதைப் பயிற்சி, பயிலரங்கம், பட்டறைகள், மாதிரிச் சிறுகதைகள், வழிகாட்டி நூல்கள் போன்ற வகையிலே முன்னெடுத்து வரப்பட்டுள்ளன. ஒரு புதிய திசையில் படைப்பாற்றல்மிக்க ஆக்கங்களை மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்கிற நோக்கில் உருவானதுதான் சிறுவர் சிறுகதை எழுதும் போட்டி.

மாணவர்களுக்கான இத்தகைய போட்டிகள் மலேசியாவில் பிரபலமாவில்லை. நான் ஆண்டுதோறும் பலத்தரப்பட்ட மாணவர்களையும் அவர்களுக்கிருக்கும் சிறுகதை எழுதுவதன் சிக்கல்களையும் நன்கு அறிவேன். அதனைக் களைய சிறுகதைப் போட்டி ஓர் உந்துதலை உருவாக்கும் என்று நம்பினேன். பரிச்சார்த்த முறையில் கெடா மாநிலத்தில் இரண்டு முறை சிறுகதை எழுதும் போட்டியை நடத்தி மாணவர்களுக்குப் பரிசும் கொடுத்துள்ளேன். இம்முறை தேசிய அளவில் ஓர் இலக்கிய அலையை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்து இப்போட்டியை மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக வடிவமைத்தேன்.

கே.பாலமுருகன்

கேள்வி: இப்போட்டியில் மாணவர்களின் பங்கேற்பு எப்படி இருந்தது?

பதில்: தொடங்கிய சில வாரங்களிலேயே புலனம், முகநூலில் அதிகம் பகிரப்பட்டுப் பலரின் கவனத்தை ஈர்த்தது. பின்னர், ஒரு மாதக் காலக்கட்டத்தில் மொத்தம் 257 சிறுகதைகள் வந்து குவிந்தன. இது உண்மையில் நான் எதிர்ப்பாராத வரவேற்பு என்றே சொல்ல வேண்டும். அவற்றுள் சில சிறுகதைகள் முன்னமே நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு இல்லாததால் நீக்கப்பட வேண்டியாகியிருந்தது. பின்னர், இறுதி செய்யப்பட்ட 237 சிறுகதைகள் தேர்வுக் குழுவிடம் சென்றது.

கேள்வி: இப்போட்டியை எத்தனை சுற்றுகளாக நடத்தினீர்கள்?

பதில்: முதல் சுற்றில் 22 சிறுகதைகள் தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதனைக் கண்டறிய தேர்வுக் குழுவில் இருந்த ஐந்து ஆசிரியர்கள் மிகவும் கடுமையாக உழைத்தார்கள் என்றே சொல்ல வேண்டும். பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட 22 சிறுகதைகள் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவர் சிறந்த பத்துச் சிறுகதைகளை வரிசைப்படுத்தி அறிவித்துள்ளார். இருப்பினும் இறுதி சுற்றுக்குத் தேர்வான 22 சிறுகதைகளுமே சிறந்த படைப்புகள்தான். அவை அனைத்திற்கும் பரிசும் நற்சான்றிதழும் தரப்படவுள்ளன.

கேள்வி: இப்போட்டியின் தொடர்ச்சியாக என்ன திட்டமிட்டுள்ளீர்கள்?

பதில்: நிச்சயம் இப்போட்டியை இனி ஒவ்வொரு வருடமும் நடத்தத் திட்டமிட்டுள்ளேன். ஆர்வமுள்ள மாணவர்களின் தேடலும் பங்கேற்பும் எப்பொழுதும் வற்றாத ஒன்றாகும். தொடர்ந்து இப்போட்டியின் இறுதி சுற்றில் தேர்வான 22 சிறுகதைகளையும் ஒரு நூலாகத் தொகுத்து அதனை வருகின்ற 26ஆம் திகதி மே மாதம் தேசிய வகை தம்புசாமி தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் மதியம் 2.00 மணிக்கு வெளியீடு செய்யவிருக்கின்றோம்.

மாணவர்களின் சிறுகதைகள் மொத்தமாக தொகுக்கப்படுவது இதுவே முதல் முறையாகக்கூட இருக்க வாய்ப்புண்டு. மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குச் சிறுகதை எழுத இனி மலேசிய மாணவர்களே வழிகாட்டும் ஒரு சூழலை இதன்வழி உருவாக்க முடிந்ததே ஒரு சாதனையாகக் கொள்கிறேன்.

கேள்வி: போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்கள் பற்றிச் சொல்ல முடியுமா?

பதில்: மொத்தம் 22 இளம் எழுத்தாளர்களும் கெடா, சிலாங்கூர், பேராக், நெகிரி செம்பிலான், பினாங்கு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். தவநிதா அழகர்சுவாமி, கீர்த்திகா கனியப்பன், நிமலேஷ்வரன் தமிழரசு, சஷ்மீத்தா இரவி, பர்வேஷ் கணேசன், திவ்யாஷினி ஜெயவாணன், கோமேதகன் சுகு, திரிஷானா கோபு, மனோஜ் ராஜ் சங்கர், யாழினி சிவஞானம், காயத்திரி முனியாண்டி, கவிவர்மன் சரவணன், சுஜித்தா மணிமாறன், தேவேந்திரன் விஜயகுமார், கெஸ்விந்தன் சரவணன், சஞ்சனா ஸ்ரீ சந்திரன், ஜெய்ஸ்ரீ ரமேஸ், தமிழ்மலர் இராமலிங்கம், தருவின் கணேசமூர்த்தி, விஷால் புஷ்பராஜன், தனுஸ்ரீ சத்தியநாராயணன் மற்றும் நித்திலா புஷ்பராஜன் ஆவர்.

இவர்களும் யாவரும் சிறந்த எழுத்தாளர்களாக எதிர்காலத்தில் மலர்வதற்கான வாய்ப்பும் அடிப்படையும் உள்ள மாணவர்கள் ஆவர். முறையான வாசிப்பும் எழுத்துப் பயிற்சியும் தேடலும் தொடர்ந்தால் அடுத்த தலைமுறையில் நாட்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களாகத் திகழ்வார்கள் என்றால் அது மிகையாகாது. ஒருவருக்கொருவர் சளைக்காமல் தனித்துவம் வாய்ந்த படைப்பைத் தந்துள்ளார்கள். இந்நூல் உருவாக்கத்திலும் நிகழ்ச்சி ஏற்பாட்டிலும் எனக்கு உதவிய திரு.பி.எம்.மூர்த்தி, திரு.ந.பச்சைபாலன், எழுத்தாளர் யோகி, ஓவியர் சந்துரு, தம்புசாமி தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பாக்கியா பாலன், சங்கரி, அர்ஷினி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. இம்மாணவர்களின் வெற்றியைக் கொண்டாடவும் சிறுவர் இலக்கியத்தின் தேவையை அறிந்து கொள்ளவும் அனைவரையும் நிகழ்ச்சிக்கு அன்புடன் அழைக்கின்றோம்.

நேர்காணல்: யோகி