Home வணிகம்/தொழில் நுட்பம் ஜனவரி 2019-இல் குஜராத்தில் பிரம்மாண்ட வணிக மாநாடு

ஜனவரி 2019-இல் குஜராத்தில் பிரம்மாண்ட வணிக மாநாடு

1109
0
SHARE
Ad
இந்தியத் தூதரகத்தின் வணிகப் பிரிவுக்கான முதன்மைச் செயலாளர் டாக்டர் வருண் ஜெப் – குஜராத் மாநில அரசின் ராஜ்குமார் பெனிவால்

கோலாலம்பூர் – அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் தலைநகர் காந்தி நகரில் நடைபெறும் ‘குஜராத் வணிக உச்சநிலை ’ மாநாட்டில் மலேசிய வணிகர்களும், ஆர்வலர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் எனவும், குஜராத் மாநிலத்தில் குவிந்து கிடக்கும் வணிக வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்று அம்மாநில அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிரம்மாண்டமான மாநாட்டு மண்டப மற்றும் கண்காட்சி வசதிகளைக் கொண்ட மகாத்மா மந்திர் என்ற வளாகத்தில் இந்த வணிக மாநாடு நடைபெறுகிறது.

இராஜ்குமார் பெனிவால்

நேற்று வியாழக்கிழமை கோலாலம்பூர் ஷங்ரிலா தங்கும் விடுதியில் நடைபெற்ற விளக்கமளிப்புக் கூட்டத்தில் குஜராத் மாநில அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொண்ட ராஜ்குமார் பெனிவால் தலைமையிலான குழுவினர் இந்த “துடிப்பான குஜராத் உச்சநிலை மாநாடு” (Vibrant Gujarat Summit) குறித்த விளக்கங்களை வழங்கினர். ராஜ்குமார் பெனிவால் குஜராத் மாநிலத்தின் தொழில்துறைக்கான பிரிவின் தலைமை நிர்வாக இயக்குநராவார்.

#TamilSchoolmychoice

இந்தக் குழுவினர் குஜராத் மாநாடு குறித்த விளக்கக் கூட்டங்களை நடத்த மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கின்றனர்.

இந்தியத் தூதரகத்தின் வணிகப் பிரிவுக்கான முதன்மைச் செயலாளர் டாக்டர் வருண் ஜெப்

கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகத்தின் வணிகப் பிரிவின் ஆதரவுடன் இந்த விளக்கக் கூட்டம் நடத்தப்பட்டது.

மலேசிய வர்த்தக மற்றும் தொழிலியல் சம்மேளனத்தின் உதவித் தலைவர் டத்தோ சோ தியான் லாய் வரவேற்புரையாற்ற மலேசியாவுக்கான இந்தியாவின் துணைத் தூதர் நிகிலேஷ் கிரி சிறப்புரையாற்றினார்.

ராஜ்குமார் பெனிவால் குஜராத் மாநிலம் குறித்த விளக்கவுரையை நிகழ்த்தினார்.

மலேசிய முதலீட்டு ஆணையமான மைடாவின் (MIDA) வெளிநாட்டு முதலீட்டுப் பிரிவுக்கான துணை இயக்குநர் ஷகெல்லா சக்காரியாவும் இந்தியாவில் குறிப்பாக குஜராத்தில் கிடைக்கக் கூடிய வணிக வாய்ப்புகள் குறித்த விளக்கவுரையை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்றதோடு, கலந்து கொண்டவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் ஏற்பாட்டுக் குழுவினர் பதிலளித்தனர்.

குஜராத் மாநாடு குறித்த பின்னணி

உலகெங்கிலும் உள்ள வணிகர்களையும், தொழில் துறை நிபுணர்களையும் அழைத்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குஜராத் மாநிலத்தின் வளங்களையும், வாய்ப்புகளையும் எடுத்துக் கூறும் மாநாட்டை நடத்தும் திட்டத்தை நடப்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோது 2003-இல் அறிமுகப்படுத்தி வந்தார். அதன் மூலம் இந்தியாவுக்கு வரும் வணிக நிறுவனங்களின் முதல் தேர்வாக குஜராத் மாநிலத்தை மோடி உருமாற்றினார்.

அதைத் தொடர்ந்து இந்த மாநாடுகள் அடுத்து வந்த முதலமைச்சர்களாலும் சிறப்புற நடத்தப்பட்ட வந்திருக்கின்றது. அந்த வகையில் 2019-ஆம் ஆண்டுக்கான மாநாட்டை நடப்பு குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானி முன்னின்று நடத்துகிறார்.

குஜராத் வணிக மாநாடு நடைபெறவிருக்கும் மகாத்மா மந்திரின் தோற்றம்

கால ஓட்டத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் பலதரப்பட்ட உலக அளவிலான பிரமுகர்களையும் ஈர்க்கும் களமாக இந்த மாநாடு வளர்ச்சியடைந்திருக்கிறது. உதாரணமாக, ஜனவரி 2017-இல் நடைபெற்ற 8-வது குஜராத் அனைத்துலக மாநாடு சுமார் 100 நாடுகளில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை ஈர்த்தது. இவர்களில் நான்கு உலக நாடுகளின் தலைவர்கள், நோபல் பரிசு வெற்றியாளர்கள், சிந்தனாவாதிகள், அனைத்துலக வணிக நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோரும் அடங்குவர்.

பிரவாசி பாரதிய டிவாஸ் மாநாட்டுடன் இணைந்து நடத்தப்படும் குஜராத் மாநாடு

எதிர்வரும் 2019-ஆம் ஆண்டில் ஜனவரி 21 தொடங்கி பிரவாசி பாரதிய டிவாஸ் என்ற இந்திய வம்சாவளியினருக்கான அனைத்துலக மாநாடு வாரணாசி (காசி) நகரில் நடைபெறுவதால், அதற்கு முன்பாக ஜனவரி 18 முதல் 20 வரை நடைபெறும் குஜராத் மாநாடு கூடுதலான சிறப்புகளோடும், மேலும் அதிகமான பங்கேற்பாளர்களுடனும் கோலாகலமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.