ஜாகர்த்தா – நேற்று திங்கட்கிழமை காலை ஜாவா கடல் பகுதியில் விழுந்த லயன் ஏர் விமானத்தின் பயணிகளின் சடலங்கள் என என நம்பப்படும் 9 உடல்களை இந்தோனிசிய மீட்புப் படையின் இதுவரையில் கண்டெடுத்துள்ளனர்.
இன்று காலையில் மீண்டும் மீட்புப் பணிகள் தொடங்கியிருக்கும் வேளையில் அந்த விமானத்தின் மையப் பாகத்தை முக்குளிப்பு வீரர்கள் இன்னும் கடலுக்கடியில் கண்டுபிடிக்கவில்லை. இந்த மையப் பகுதியில்தான் பெரும்பாலான பயணிகள் சிக்கிக் கொண்டு மரணமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையில், விமானத்தில் பயணம் செய்தவர்களில் யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் நம்பப்படுகிறது.
அந்த விமானத்தில் பயணிகள், பணியாளர்கள் உள்ளிட்ட 189 பேர் பயணம் செய்தனர். வானிலை மற்றும் மோசமான மேகமூட்டம் காரணமாகவோ, தொழில் நுட்பக் கோளாறு காரணமாகவோ, அந்த விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
JT610 என்ற பயணத் தடத்தைக் கொண்ட அந்த விமானம் போயிங் (Boeing 737 MAX 8) ரக விமானமாகும். நேற்று திங்கட்கிழமை காலை 6.20 மணியளவில் ஜாகர்த்தாவின் சுகர்னோ-ஹட்டா விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் புறப்பட்டது.
புறப்பட்ட 13 நிமிடங்களில் அதன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.