பழனி,ஜன.19 – பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை என்ணும் பணி நிறைவு பெற்றது. இதில் ரூ.2 கோடிக்கும் மேலான தொகை கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரையில் பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
கோவில் நிர்வாகிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள், அறநிலையத் துறை அதிகாரிகள் ஆகியோர் மேற்பார்வையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.
பழனி கோவில் அலுவலர்கள், ஊழியர்கள், தவில் மற்றும் நாதஸ்வர கல்லூரி மாணவர்கள், பழனி யாண்டவர் பெண்கள் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி மாணவ- மாணவிகள், மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள், பொள்ளாச்சியை சேர்ந்த தன்னார்வலர்கள் ஆகியோர் இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த உண்டியல் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து, இதில் உண்டியல் காணிக்கையாக ரூ. 2 கோடியே 59 லட்சத்து 66 ஆயிரத்து 575 கிடைத்தது. இது தவிர 603 கிராம் தங்கம், 8250 கிராம் வெள்ளி, 333 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் ஆகியவை கிடைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.