கொழும்பு – எதிர்வரும் நவம்பர் 5-ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடவிருக்கும் வேளையில், மகிந்த ராஜபக்சேயின் புதிய அரசாங்கத்திற்கு எதிராக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கும் என அதன் தலைவர் இரா.சம்பந்தன் (படம்) அறிவித்துள்ளார்.
ராஜபக்சேயின் நியமனம் அரசமைப்பை முற்றிலும் மீறுவதாகவும் எனவே சட்டவிரோதமாக பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஒருங்கிணைப்புக் கூட்டத்தை நடத்தியது.
இலங்கை அரசமைப்பின்படி பதவியிலிருக்கும் பிரதமரைப் பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் அதிபரிடம் இல்லை என்றும் முன்னர் அதிபருக்குக் கொடுக்கப்பட்டிருந்த அந்த அதிகாரம், திருத்தத்தின் மூலம் திட்டவட்டமாக நீக்கப்பட்டது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்தது.