புத்ரா ஜெயா – சீ பீல்ட் மாரியம்மன் ஆலயத்தின் நிலத்தைக் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொள்ள முற்பட்ட நில மேம்பாட்டாளரான ஒன் சிட்டி நிறுவனத்தின் வழக்கறிஞர் நிறுவனம், அதற்காக திங்கட்கிழமை அதிகாலையில் மலாய்க்காரர்களைக் கொண்ட ஒரு குழுவினரை கட்டணத்துக்கு அமர்த்தியதாகவும், ஆனால் அந்தக் குழுவினர் அத்து மீறி ஆலயத்தின் வழிபாட்டுப் பகுதியில் நுழைந்தனர் என்றும் காவல் துறையின் விசாரணைகள் புலப்படுத்துவதாக உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் இன்று தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டு, தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் 21 நபர்களில் ஒன் சிட்டி நிறுவனத்தின் இரண்டு வழக்கறிஞர்களும் அடங்குவர். இவர்கள் அனைவரும் சீ பீல்ட் ஆலய வளாகத்தில் நடந்த கலவரங்கள் மீதான விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இன்று உள்துறை அமைச்சில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மொகிதின் யாசின் சீ பீல்ட் சம்பவம் இனவாதம் சம்பந்தப்பட்டதல்ல என்றும் மாறாக, ஆலயம் அமைந்திருக்கும் நிலத்தின் உரிமை தொடர்பில் நில மேம்பாட்டாளருக்கும், ஆலய நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்ட மோதல் அது என்றும் அவர் மேலும் விளக்கினார்.
சம்பந்தப்பட்ட நிறுவனம் ஆலய நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான சட்ட நடைமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்கவில்லை என்றும், அவற்றை இன்னும் முடிக்கவில்லை என்றும் மொகிதின் கூறினார்.
ஆலயத்தைக் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொள்ள அமர்த்தப்பட்ட குழுவின் தலைவனுக்கு 150,000 ரிங்கிட் வழங்கப்பட்டதாகவும், அந்தக் குழுவில் வந்த சுமார் 50 நபர்களுக்கு தலா 150 ரிங்கிட் முதல் 300 ரிங்கிட் வரை பணம் வழங்கப்பட்டதாகவும் அதிர்ச்சி தரும் தகவலை மொகிதின் இன்று வெளியிட்டார்.