Home வணிகம்/தொழில் நுட்பம் இந்தியாவில் வணிகத்தை உயர்த்தத் தடுமாறும் நெட்பிலிக்ஸ்

இந்தியாவில் வணிகத்தை உயர்த்தத் தடுமாறும் நெட்பிலிக்ஸ்

1748
0
SHARE
Ad

புதுடில்லி – உலகம் எங்கும் சுமார் 190 நாடுகளில் கால்பதித்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது நெட்பிலிக்ஸ். கணினி மற்றும் கையடக்கக் கருவிகளில் திரைப்படங்களையும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் கட்டணம் செலுத்தி பெறும் வணிகத்தில் முன்னணி வகிக்கும் நிறுவனம்தான் நெட்பிலிக்ஸ்.

அமெரிக்காவில் மட்டும் சுமார் 58.5 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டிருக்கும் நெட்பிலிக்ஸ், அனைத்துலக அளவில் 78.6 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டிருக்கிறது.

ஆனால், இந்தியாவில் மட்டும் நெட்பிலிக்ஸ் தனது வணிகத்தை உயர்த்துவதற்கும், விரிவாக்குவதற்கும் பெரும் சவால்களைச் சந்தித்து வருவதாக வணிக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

அதற்குப் போட்டியாக இந்த வணிகத்தில் முன்னணி வகிக்கும் மற்றொரு நிறுவனம் அமேசோன் பிரைம். இந்தியாவில் மட்டும் அமேசோன் பிரைம் நெட்பிலிக்சை விட அதிகமான சந்தாதார்களைக் கொண்டிருக்கிறது. இரண்டு நிறுவனங்களுமே 2016-ஆம் ஆண்டில் இந்தியாவில் நுழைந்தன.

ஆனால், இவர்களுக்குப் போட்டியான இன்னொரு ஜாம்பவான் இந்தியாவில் கோலோச்சிக் கொண்டிருப்பதுதான் நெட்பிலிக்ஸ், அமேசோன் பிரைம் இரண்டுமே தடுமாறுவதற்கான காரணம். அந்த நிறுவனம்தான் ஹோட் ஸ்டார் (Hot Star). இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டார் தொலைக்காட்சி அலைவரிசையின் திரைப்படங்களையும், நிகழ்ச்சிகளையும் அதிகாரபூர்வமாக இணையம் வழி ஒளியேற்றும் நிறுவனம்தான் ஹோட் ஸ்டார்.

உலகிலேயே மிகப்பெரிய இணையப் பயன்பாட்டைக் கொண்ட நாடுகளில் முதலாமிடத்தை சீனா கொண்டிருக்க இரண்டாமிடத்தைக் கொண்டிருக்கும் நாடு இந்தியா. எனவே, இந்தியாவில் தங்களின் வணிகத்தை விரிவுபடுத்த நெட்பிலிக்ஸ் மற்றும் அமேசோன் பிரைம் இரண்டுமே மும்முரமாக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவில் மட்டும் சுமார் 35 நிறுவனங்கள் இத்தகைய இணையம் வழி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றன. இவர்களுக்கு நடுவில் ஹோட் ஸ்டார் மட்டும் 70 விழுக்காட்டு சந்தையைத் தன் கைவசத்தில் வைத்திருக்கிறது. அமேசோன் பிரைம் சுமார் 5 விழுக்காட்டையும், நெட்பிலிக்ஸ் 1.4 விழுக்காட்டையும் மட்டுமே தனது சந்தையாகக் கொண்டிருக்கிறது.

சோனி போன்ற மற்ற நிறுவனங்கள் எஞ்சிய சந்தை விழுக்காடுகளைக் கொண்டிருக்கின்றன.

ஹோட் ஸ்டார் இவ்வளவு பெரிய சந்தை விழுக்காட்டைக் கொண்டிருப்பதற்கான முக்கியக் காரணம், கிரிக்கெட் போட்டிகளின் இணையம் வழியான விநியோக உரிமைகளை ஹோட் ஸ்டார் தன் கைவசம் வைத்திருப்பதுதான். இதன் காரணமாக, கிரிக்கெட் பிரியர்களான இந்தியர்கள் அதிக அளவில் ஹோட் ஸ்டார் இணைப்பைத்தான் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான் ஹோட் ஸ்டாருக்கு கிடைக்கும் வரவேற்புக்குக் காரணமாகும்.

அதனால்தான் நெட்பிலிக்ஸ், அமேசோன் பிரைம் இரண்டும் அதிகமான சந்தாதாரர்களை ஈர்ப்பதில் தடங்கல்களை எதிர்நோக்குகின்றன.

நெட்பிலிக்ஸ் இணைப்பை மலேசியர்கள் மலேசியாவில் பெற முடியும். அமேசோன் பிரைம் இணைப்பும் மலேசியாவில் கிடைக்கிறது.

ஆனால், ஹோட் ஸ்டார் இணைப்பு மட்டும் மலேசியாவில் வழங்கப்படுவதில்லை. ஸ்டார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான ஏகபோக உரிமையை மலேசியாவில் அஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனம் கொண்டிருப்பதால், அதன் தொடர்பிலான காப்புரிமை காரணமாக ஹோட் ஸ்டார் இணைய இணைப்பு மலேசியாவில் கிடைப்பதில்லை என நம்பப்படுகிறது.

-செல்லியல் தொகுப்பு