Home நாடு பூர்வகுடி மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் – பொன்.வேதமூர்த்தி

பூர்வகுடி மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் – பொன்.வேதமூர்த்தி

1896
0
SHARE
Ad

குளுவாங் – நாட்டில் வாழ்கின்ற பூர்வகுடி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் களைவதற்காக மாநில அரசுகளுடனும் சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் மத்திய  அரசாங்கம் ஆலோசிக்கும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

குளுவாங்கிற்கு அருகில் உள்ள கஹாங் வட்டாரத்தில் பூர்வகுடி மக்கள் வாழும் கிராமங்களை நேற்று சனிக்கிழமை பார்வையிட்டபின், அங்கெல்லாம் வாழ்கின்ற மக்கள் சுத்தமான தண்ணீர், மின் வசதி சிக்கலை எதிர்நோக்கி இருக்கும் அதேவேளை, அவர்கள் வசிக்கும் இடமும் அரசிதழில் பதிவு செய்யப்படாமல் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

“பூர்வகுடி மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கைக்குரிய அடிப்படை வசதி இல்லாமல் சிரமப்படும் அதேவேளை, தங்களின் நிலம் அரசிதழில் வெளியிடப்படாமல் இருப்பதுதான் பெரும் சிக்கலாக இருக்கிறது. இதற்கெல்லாம் தீர்வு காணப்பட வேண்டும்” என்று பூர்வகுடி மக்களின் பிரதிநிதிகளை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசியபோது தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான செனட்டர் பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

தேசிய அளவில் பூர்வகுடி மக்களின் மேம்பாட்டிற்காகவும் அவர்களுக்கான உட்கட்டமைப்பிற்காகவும் 2019 நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ள 107 மில்லியன் வெள்ளி உரிய முறையில் பயன்படுத்தப்படும்.

கஹாங் பட்டணத்தை ஒட்டியுள்ள பூச்சோர் பூர்வகுடி கிராமத்தில் ஒரு பொது மண்டபத்தைத் திறந்து வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசியபோது, நீர் விநியோகமும் மின் வழங்கலும்தான் பூர்வகுடி மக்களின் உடனடித் தேவையாக இருப்பதால் இது குறித்து மத்திய அரசாங்கம் அதிக அக்கறை கொள்ளுமென்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

முன்னதாக பூச்சோர் பூர்வகுடி கிராம பிரதிநிதி தோக் பாத்தின், செமாங்கான் அகமட் ஆகியோருடன் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கலந்துரையாடினார்.