1எம்டிபி ஊழல் விவகாரத்தில் கோல்ட்மேன் சாச்ஸ் எதிர்நோக்கும் முதல் குற்றவியல் வழக்கு இதுவாகும்.
1எம்டி மற்றும் அதன் 4 உயர் அதிகாரிகள் சுமார் 2.7 பில்லியன் ரிங்கிட்டை 1எம்டிபி நிதியிலிருந்து முறைகேடான முறைகளில் திசைமாற்றினர் என மலேசிய அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் வழக்கு தொடுத்திருக்கிறார்.
“1எம்டிபி தலைமைச் செயல் அதிகாரியும், அதன் நிர்வாக வாரியமும் நேரடியாக அப்போதைய பிரதமரிடம் தனது பரிமாற்றங்களைக் கொண்டிருந்தது. அவர்கள் எங்களிடம் 1எம்டிபியுடனான வணிகப் பரிமாற்றங்களில் இடைத்தரகர்கள் யாருமில்லை என எழுத்துபூர்வமான உறுதியளித்திருந்தனர்” என கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் சார்பாக அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார் அதன் பேச்சாளர் மைக்கல் டுவால்லி (Michael DuVally).
மலேசிய அரசாங்கம் தொடுத்திருந்த வழக்கை எதிர்த்துப் போராடுவோம் என்றும், இந்த வழக்கினால் அனைத்துலக அளவில் தங்களின் வணிக ஆற்றலும், நடப்பு வணிகங்களும் எந்த வகையிலும் பாதிக்காது என்றும் தெரிவித்துள்ளது கோல்ட்மேன் சாச்ஸ்.
மலேசிய அரசாங்கத்தின் வழக்கு காரணமாக அதன் பங்குகளின் விலைகள் சுமார் 2.8 விழுக்காடு வரையில் வீழ்ச்சி கண்டன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.