Home நாடு “நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்” லிம் கிட் சியாங் எச்சரிக்கை

“நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்” லிம் கிட் சியாங் எச்சரிக்கை

1377
0
SHARE
Ad

கோலாலம்பூர் – “புதிய மலேசியா என்ற இலக்கை நம்பிக்கைக் கூட்டணி தொடராமல் புறக்கணிக்குமானால், அரசாங்கத்திலும், அரசுக்கு வெளியிலும் செயல்படும் ஜசெக தலைவர்கள் நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து வெளியேறுவர்” என பரபரப்பான எச்சரிக்கையை லிம் கிட் சியாங் விடுத்துள்ளார்.

தனது வலைத் தளத்தில் பதிவிட்டுள்ள ஒரு கட்டுரையில் ஜசெகவின் மூத்த ஆலோசகரான கிட் சியாங் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

பத்திரிக்கையாளரும், வணிகருமான கிளமெண்ட் ஹீ என்ற பிரமுகர் ஆளுங் கட்சியிலும் அரசாங்கத்திலும் ஜசெக உருமாற்றங்களுக்கும் சீர்திருத்தங்களுக்கும் தொடர்ந்து போராடாமல் ஒதுங்கிக் கொண்டால் அந்தக் கட்சி இன்னொரு மசீச-வாகவே பார்க்கப்படும் எனக் கருத்து தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

இதற்கு பதிலளிக்கும் வகையில் எழுதிய கட்டுரையில், “ஜசெக அனைத்து இனங்களுக்கும் சரிசமமாகப் போராடுகிறது. ஒரு மலாய்ப் பெண்ணிற்காக போராடி, சிறைக்கு சென்ற லிம் குவான் எங்கைத் தலைவர்களில் ஒருவராகக் கொண்ட கட்சி ஜசெக. அதன் காரணமாக அவர் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடும் தகுதியையும் 5 ஆண்டுகளுக்கு இழந்தார். இவ்வாறு மற்ற இன சகோதரர்களுக்காகப் போராடிய வரலாற்றை ஜசெக மட்டுமே கொண்டிருக்கிறது” என லிம் கிட் சியாங் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

“நாங்கள் மசீச தலைவர்கள் போன்று முதுகெலும்பில்லாமல் செயல்பட மாட்டோம். நாங்கள் மசீச போன்று ஓர் இனத்திற்கான கட்சி மட்டுமே அல்ல. அனைத்து இனங்களுக்கும் போராடுபவர்கள். புதிய மலேசியாவை உருவாக்க முக்கியப் பங்காற்ற முடியும் என்ற நம்பிக்கையின் காரணமாகத்தான் ஜசெக தலைவர்கள் நம்பிக்கைக் கூட்டணியில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், புதிய மலேசியாவை உருவாக்கும் முயற்சிகள், இலக்குகள் தூக்கிக் கிடப்பில் போடப்பட்டால், புறக்கணிக்கப்பட்டால், ஜசெக தலைவர்கள் நம்பிக்கைக் கூட்டணியிலிருந்தும் அரசாங்கத்திலிருந்து வெளியேறக் கொஞ்சமும் தயங்க மாட்டார்கள்” என்றும் லிம் கிட் சியாங் குறிப்பிட்டுள்ளார்.