ஜாகர்த்தா: சுண்டா நீரிணை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் வாழும் மக்களை எச்சரிக்கையாக இருக்க வேண்டி, இந்தோனிசிய தேசிய பேரழிவு தகவல் முகமைத் தலைவர் சுதுபோ பூர்வோ நுக்ரோஹொ தெரிவித்தார்.
அனாக் கிராகாதாவ் (Anak Krakatau) எரிமலை மீண்டும் வெடித்து, மேலும் ஓர் ஆழிப் பேரலையை உருவாக்கலாம் எனும் ஐயத்தில் அவர் இவ்வாறு கேட்டுக் கொண்டார்.
டிசம்பர் 22-ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு, அனாக் கிராகாதவ் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து ஆழிப் பேரலை இந்தோனிசியாவின் கடற்கரைகளைத் தாக்கியது. எரிமலையின் வெடிப்பு ஆழ்கடலின் அடிப்பாக நீர்நிலைகளை கிளர்ந்தெழச் செய்தது என புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதுவரையிலும், பலியானவர்களின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 800-கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக அம்முகமை தெரிவித்தது.
இந்த எரிமலை மீண்டும் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெடித்தது. மேலும், இது மாதிரியான வெடிப்புகள் ஏற்பட்டு பேரலைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக அது எச்சரித்தது.
இந்தோனிசியாவில் நிகழ்ந்த முதல் சம்பவமாக இந்த ஆழிப் பேரலைக் கருதப்படுகிறது என இந்தோனிசிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் கூறியது. பூகம்பம் மற்றும் கண்டத்தட்டு நகர்வியல் (tectonic plates) செயல்பாடு இல்லாமல் இந்த ஆழிப் பேரலை நடந்ததாக அந்நிறுவனம் கூறியது.