கோலாலம்பூர் – நாட்டின் நிர்வாகம் தொடர்பில் மலாய் சுல்தான்கள் கருத்து தெரிவிக்கும்போது அதற்கு பதில் சொல்லவும், எதிர்வினையாற்றவும் மத்திய அரசாங்கத்திற்கு உரிமையும் பொறுப்பும் இருக்கிறது என துன் மகாதீர் கூறியுள்ளார்.
ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் இப்னி சுல்தான் இப்ராகிம் (சுருக்கமாக டிஎம்ஜே) “ஒவ்வொரு விவகாரத்தையும் அரசியலாக்குவதை விட்டுவிட்டு நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் நாட்டை ஆள்வதற்கு தொடங்க வேண்டும்” என சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மகாதீர், “டிஎம்ஜே-வுக்கு மத்திய அரசாங்கத்தின் அமைப்பு முறை எப்படி இயங்குகிறது என்பது தெரியவில்ல. மத்திய அரசாங்க அமைப்பு முறை உருவாக்கப்பட்டபோது அவர் பிறந்திருக்கவில்லை. அதனால் அவருக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த சமயத்தில் நான் பிறந்து விட்டேன். மத்திய அரசாங்கம் அமைக்கப்பட்டபோது, மத்திய அரசாங்கம் நாட்டை முழுமையாக – எல்லாப் பகுதிகளையும் ஆளும் என்பதுதான் அதன் நோக்கம். மத்திய அரசாங்கம் எந்த விவகாரங்களைக் கையாளும், மாநில அரசாங்கம் எந்த விவகாரங்களைக் கையாளும் என நாங்கள் ஒரு பட்டியல் வைத்திருக்கிறோம். அதில் எங்குமே மாநிலங்கள் சார்பாக அறிக்கைகள் விடப்படும்போது, மத்திய அரசாங்கம் பதிலளிக்கக் கூடாது எனக் கூறப்படவில்லை” எனக் கூறினார்.
நேற்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 4) நடைபெற்ற நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்திற்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிட் பேசிய மகாதீர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜோகூர் இளவரசர் நம்பிக்கைக் கூட்டணியின் மத்திய அரசாங்கம் குறித்து தெரிவித்திருக்கும் கருத்துகள் குறித்துக் கேட்கப்பட்டபோது “அவருக்கு அரசாங்கத்தில் எந்தப் பொறுப்பும் இல்லை” எனவும் பதிலளித்தார்.
கடந்த ஜனவரி 3-ஆம் தேதி தனது முகநூலில் பதிவிட்ட ஜோகூர் இளவரசர், அரசாங்கம் வெற்றிகரமாக இயங்க வேண்டும் என்றே தான் விரும்புவதாகவும், மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும், முந்தைய அரசாங்கத்திடம் எப்படி நடந்து கொண்டேனோ அப்படித்தான் இப்போதும் நடந்து கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
“சிலருக்கு நான் பேசுவது பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் மக்களால் பேச முடியாத கருத்துகளையே நான் பேசுகிறேன்” என்றும் ஜோகூர் இளவரசர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.