Home இந்தியா கல்லூரிகள் நாளை திறப்பு- தமிழக அரசு அறிவிப்பு

கல்லூரிகள் நாளை திறப்பு- தமிழக அரசு அறிவிப்பு

696
0
SHARE
Ad

tamilnaduசென்னை, ஏப்ரல் 2- இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 18 தினங்களாக மூடப்பட்டிருந்த கல்லூரிகளை, புதன்கிழமை (ஏப்ரல் 3) முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இத் தகவலை கல்லூரிக் கல்வி இயக்குநர் செந்தமிழ்ச் செல்வி மற்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் ஆகியோர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டம் தீவிரமடையத் தொடங்கியதை அடுத்து மார்ச் 15-ம் தேதி முதல் கல்லூரிகளை காலவரையின்றி மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.  இதேபோல் அண்ணா பல்கலைக்கழகம் மார்ச் 17-ம் தேதி கல்லூரிகளை காலவரையின்றி மூட உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பொறியியல் கல்லூரிகளும் மூடப்பட்டன. மருத்துவக் கல்லூரிகள் மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வந்தன.

மாணவர்களின் போராட்டம் தணிந்ததையடுத்து கல்லூரிகளை வரும் புதன்கிழமை முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் செந்தமிழ்ச் செல்வி கூறியது:-

கல்லூரிகளை  3-ம் தேதி முதல் திறக்க உத்தரவிட்டுள்ளோம்.  தேர்வுகளை எப்போது நடத்துவது என்பன உள்ளிட்ட நடவடிக்கைகளை அந்தந்த பல்கலைக்கழகங்களே முடிவு செய்யும்  என்றார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் கூறியது:-

கல்லூரிகள் புதன்கிழமை திறக்கப்படுவதால், பருவத் தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. கல்லூரிகள் சனிக்கிழமைகளிலும் வகுப்புகளை நடத்தி பாடங்களை முடித்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்றார்.