செமினி: நேற்று (திங்கட்கிழமை), பிரதமரால் அறிவிக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைக் குழுவானது (எம்டிஇ), பொருளாதாரத்தை மீட்க மற்றும் வலுப்படுத்த உருவாக்கப்பட்டது என உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார். அதனை ஒரு முன்முயற்சியாகப் பார்க்க வேண்டுமே தவிர, நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் பலவீனமாகப் பார்க்கக் கூடாது என அவர் கூறினார்.
தாம் அத்திட்டத்தினை முன்மொழிந்ததாகவும், அடிமட்டத்தில் எவ்வாறான பொருளாதாரச் சிக்கல் நிலவுகிறது என அறிந்தே இந்தக் குழு அமைக்கப்பட்டது என அவர் கூறினார்.
ஆயினும், தற்போதைய பொருளாதாரப் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு மக்கள் இந்த குழுவிற்கு போதுமான கால அவகாசத்தை வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, டத்தோ அப்துல் காடிர், நேற்று அறிவிக்கப்பட்ட இந்த பொருளாதார நடவடிக்கை குழுவிற்கு பின்னால், உண்மை ஒன்று ஒளிந்திருப்பதாக தனது வலைப்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அதாவது, தற்போதைய அமைச்சரவையானது, பொருளாதாரம், நிதி மற்றும் வெகுஜன மக்களின் நலன்களைப் பற்றிய விவகாரங்களைக் கையாளுவதற்கு பலம் இழந்து இருப்பதாகப் பதிவிட்டிருந்தார்.