அடிஸ் அபாபா (எத்தியோப்பியா) – எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரிலிருந்து கென்யாவின் தலைநகர் நைரோபி நோக்கிச் சென்று கொண்டிருந்து எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 149 பயணிகள் மற்றும் 8 விமானப் பணியாளர்களில் யாரும் உயிர்பிழைக்கவில்லை என அந்த விமான நிறுவனம் அறிவித்திருக்கிறது.
விமானம் விழுந்த இடத்தில் அதன் பாகங்கள் உடைந்து சிதறி ஆங்காங்கே காணப்படுகின்றன என ஊடகங்கள் தெரிவித்தன.
இந்த போயிங் 737-800MAX இரக விமானம் ET 302 என்ற வழித் தடத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது உள்ளூர் நேரப்படி காலை 8.38 மணிக்கு விமான நிலையத்துடனான தனது தொடர்பினை இழந்தது.
அடிஸ் அபாபா நகரின் தென்கிழக்கு பகுதியில் இந்த விமானம் விழுந்தது.
எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் அறிக்கையின்படி இந்த விபத்தில் மரணமடைந்தவர்களில் மலேசியா நாட்டைச் சேர்ந்தவர்கள் யாருமில்லை.
இந்தியா நாட்டைச் சேர்ந்தவர்கள் 4 பேர் எனத் தெரிவிக்கப்பட்டது. பயணிகளில் பெரும்பான்மையானோர் கென்யா மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்தவர்களாவர்.