வாஷிங்டன்: எத்தியோப்பியாவில் போயிங் 737 மேக்ஸ் 8 இரக விமான விபத்திற்குப் பிறகு உலக நாடுகள் சில அம்மாதிரி விமானத்திற்குத் தடை விதித்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட அந்த விபத்தில் 157 பேர் உயிரிழந்தனர். இதே இரக விமானம் இந்தோனிசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. அந்த விபத்தில் சுமார் 189 பேர் பலியாகினர்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, போயிங் 737 மேக்ஸ் 8 இரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தன. இதன் செயல்பாட்டை முதன் முதலில் தற்காலிகமாக தடை செய்வதாக சீனா அறிவித்தது. அதற்கு பிறகு, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், இந்தியா, எத்தியோப்பியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு போன்ற நாடுகள் இந்த அறிவிப்பைச் செய்தன.
மலேசியாவில் இந்த இரக விமானங்கள் பயன்பாட்டில் இல்லையென்றாலும், அவற்றை வாங்குவதற்கான ஒப்பந்தங்களை தற்காலிகமாக போக்குவரத்து அமைச்சு நிறுத்தி உள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தது. மேலும், சில நாடுகளும் இந்த விமானத்தின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றன. எனவே, போயிங் நிறுவனத்துக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனிடையே, நேற்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போயிங் 737 மேக்ஸ் 8 மற்றும் 9 இரக விமானங்கள் தற்காலிகமாக செயல்பாட்டில் இருக்காது என அறிவித்திருந்தார்.
எத்தியோப்பிய சம்பவதைக் காரணமாகக் காட்டி போயிங் 737 மேக்ஸ் 8 இரக விமானங்களை தடை செய்வது சரியான நடவடிக்கையாக இல்லை என அமெரிக்க விமான போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதனால், போயிங் நிறுவனம் பெரும் இழப்பீடை சந்திக்க நேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆயினும், இதுவரையிலும் நடத்திய ஆய்வில், போயிங் 737 மேக்ஸ் 8 இரக விமானத்தில் செயல்திறன் குறைபாடுகள் ஏதும் கண்டறியப்படவில்லை என அமெரிக்க விமான போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.