புது டில்லி: இந்திய நாடு முழுவதும் தேர்தலுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான பிஎம் நரேந்திர மோடி படம் ஏப்ரல் 12-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் தயாரிப்பில் இருக்கும் போதே, எதிர்க்கட்சிகளிடமிருந்து பல்வேறு எதிர்ப்புகள் வெளிவந்தன.
கடந்த மார்ச் 10-ஆம் தேதி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தன. இதனால் அரசியல் கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள், சுவரொட்டிகள், அரசு விளம்பரங்களில் இடம் பெற்றிருக்கும் பிரதமரின் புகைப்படம் உள்ளிட்டவை அகற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஓமங் குமார் இயக்கத்தில், இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை தேர்தல் தொடங்கிய மறுநாள் வெளியிடுவதற்கு எதிர்க்கட்சியினர் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். ஆயினும், படம் சொன்ன தேதியில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இது குறித்த தகவல்கள் மேலும் தெரிவிக்கப்படும் எனவும் படக்குழுவினர் கூறியுள்ளனர்.