கோலாலம்பூர்: பல்வேறு பொறுப்பற்ற தரப்புகளால் இன ரீதியிலான பிரச்சனைகள் நாட்டில் எழுப்பபட்டு வருவதாக பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி கூறினார். பெரும்பாலும், பொறுப்பற்ற அரசியல்வாதிகளின் செயலாகவே அவை அமைகிறது என அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான செயலினால், ஒரு முதிர்ச்சியற்ற அரசியல் இந்நாட்டில் இல்லாததை பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார். நாடு புதிய ஓர் அரசாங்கத்தின் கீழ் செயல்படுவதை அவர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை என அவர் கூறினார்.
மலேசியர்களிடையே இருக்கக்கூடிய மற்றுமொரு பிரச்சனையாகக் கருதப்படுவது, சமூக ஊடகங்களில் எழுப்பப்படும் இனவெறி கருத்துகளாகும் என அவர் தெரிவித்தார். பல இனவாத பிரச்சினைகள் பொறுப்பற்ற கட்சிகளால் தூண்டப்பட்டு, அவை சமூக ஊடகங்களில் தேவையற்றப் புரட்சியை ஏற்படுத்துகிறது என அமைச்சர் கூறினார்.
அவ்வாறான செயல்கள் பல்வேறு இன மக்களால் மேற்கொள்ளப்படுகிறது என அவர் சுட்டிக் காட்டினார்.
“எந்தவொரு கட்சியை சார்ந்திருந்தாலும் பரவாயில்லை. உங்களை நான் ஒன்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன். நமது நாட்டிற்கு நன்மை பயக்கும் ஒற்றுமை மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை கருத்தில் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவாக இருங்கள்” என அவர் கூறினார்.