நாகை: நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் மீன்வர்களின் வலையில் பழமையான சிவலிங்கம் ஒன்று சிக்கியுள்ளது. இந்த சிவலிங்கத்தை புதிய கோயில் கட்டி வழிபட அப்பகுதி மக்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நாகை, கொள்ளிடம் ஆற்றங்கரைத் தெருவை சேர்ந்த விஜி மற்றும் குமார், கொள்ளிடம் ஆற்றில் நாட்டுப் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அவர்கள் வீசிய வலையில் ஒரு கனமான பொருள் சிக்கியது. வலையை இழுக்க முடியாமல் இழுத்து, வலையில் சிக்கியிருந்த சிவலிங்கத்தைப் பார்த்து அதிசயித்துள்ளனர்.
இந்த சிவலிங்கம் 1,000 ஆண்டு பழமையானது என நம்பப்படுகிறது. அந்த சிவலிங்கத்தை அப்பகுதி மக்கள் தற்போது அங்குள்ள விநாயகர் கோயிலில் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். ஆயினும், கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தின் உண்மையான கால அளவு முறையான ஆய்வின் வழியே கண்டறிய முடியும் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் பேசுகையில், மீனவர் வலையில் சிவலிங்கம் சிக்கியிருப்பது இறைவனின் ஆசியாக கிராமத்தினர் கருதுகின்றனர் என்றும், இந்த சிவலிங்கத்திற்கு தனியாக கோயில் அமைத்து வழிபட போவதாகவும் கூறினார்.