ரந்தாவ்: 1எம்டிபி உண்மையாகவே ஒரு பிரச்சனை மிக்க அமைப்பாக இருந்தால் ஏன் நஜிப்பை இன்னும் கைது செய்யாமல் இருக்கிறார்கள் என அம்னோ கட்சியின் இடைக்காலத் தலைவர் முகமட் ஹசான் கேள்வி எழுப்பினார்.
நம்பிக்கைக் கூட்டணி அரசுக்கு 1எம்டிபியை தவிர்த்து அரசாங்கத்தை நிருவகிப்பதற்கு வேறெந்த வழிமுறைகளும் தெரியாததை இது பிரதிபலிப்பதாக இருக்கிறது என அவர் சாடினார். இது நாள் வரையிலும், 1எம்டிபி விவகாரத்தை வைத்தே, அரசாங்கத்தை வழி நடத்தி வந்துள்ளதாகவும், மக்களுக்கு செய்து தந்த வாக்குறுதிகளை செயல்படுத்துவதற்கு வழிகளை கண்டறிந்ததாக இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
“நான் நஜிப்பை கைது செய்யுங்கள் எனக் கூறவில்லை, ஆனால், இவை அனைத்துமே அவர் மீது சுமத்தப்பட்ட அவதூறுகள், பொய்க் குற்றச்சாட்டுகள்” என ஹசான் தெரிவித்தார்.
பணமோசடி, நம்பிக்கை மீறல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றங்களுக்காக நஜிப் மீது 42 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் தொடர்பான ஏழு குற்றச்சாட்டுகளுக்கான வழக்கு விசாரணை நேற்று புதன்கிழமை தொடங்கப்பட்டது.
“நஜீப் மக்களுக்காக செய்த சேவையை எளிதில் மறந்திட வேண்டாம்” என்று ஹசான் நினைவுக்கூர்ந்தார்.
நாளை வெள்ளிக்கிழமை இரவு தேசிய முன்னணியின் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள நஜிப் வர இருப்பதாகக் கூறப்படுகிறது.