சென்னை: தமிழர்களின் முந்தைய வரலாற்றினை மறைக்க முற்படுவதாக இந்திய அரசின் மீது பல்வேறு தரப்புகள் குற்றம் சாட்டி வந்தனர். ஒரு வேளை தமிழர்களின் உண்மை வரலாறு வெளிக்கொணரப்பட்டால், இந்தியாவின் மூத்தக் குடிகளாக தமிழர்கள் ஆகி விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவே இந்த வரலாற்று உண்மைகள் மறுக்கப்பட்டு வந்ததாக தமிழக வரலாற்று தன்னார்வலர்கள் பலர் கருத்துகள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களின் கார்பன் பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்று, அவை சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையவை எனக் கணக்கிடப்பட்டுள்ளன.
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த இரண்டு பொருள்களை, அமெரிக்காவில் உள்ள தொல்லியல் ஆய்வகத்திற்கு அனுப்பி அங்கு கார்பன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒரு பொருளின் வயது கி.மு. 905-க்கும், மற்றொன்றின் வயது கி.மு. 791-க்கும் முற்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாய்வு நடத்தப்பட வேண்டும் என்றும், அங்கு கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களுக்கு அருங்காட்சியகம் அமைத்து பழங்காலப் பொருட்களை காட்சியகப்படுத்த வேண்டும் எனவும் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அதுபடி, ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கார்பன் பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அடுத்து, இந்த முடிகள் வெளியிடப்பட்டன. தமிழ் மொழியே இந்தியாவின் மூத்த மொழி என தெரிய வருவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். மீண்டும் அப்பகுதியில் மத்திய அரசு ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதிக்குமா என்பதை மத்திய தொல்லியல் துறைத்தான் பதிலளிக்க வேண்டும் எனக் கூறி இந்த வழக்கினை ஏப்ரல் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.