Home அரசியல் பிகேஆர் கட்சிக்கு தாவியதால் தடுமாறும் முத்து பழனியப்பன்

பிகேஆர் கட்சிக்கு தாவியதால் தடுமாறும் முத்து பழனியப்பன்

621
0
SHARE
Ad

Muthu-Palaniappan-Sliderஜனவரி 21 – ம.இ.காவிலிருந்து பிகேஆர் கட்சிக்கு தாவிய முத்துப் பழனியப்பனுக்கு (படம்) நான்கு பக்கங்களில் இருந்தும் ஒரே இடியும் மின்னலுமாக அரசியல் தாக்குதல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

ம.இ.காவை விட்டு விலகியதும், ம.இ.காவை சாடி அறிக்கை மேல் அறிக்கை விட்டுக் கொண்டிருந்த முத்து பழனியப்பனை நெகிரி செம்பிலான் ம.இ.காவை சேர்ந்த டத்தோ ராஜகோபாலு, டத்தோ வி.எஸ்.மோகன் ஆகியோர் முதலில் அவரை காய்ச்சி எடுத்தனர்.

ம.இ.காவில் இருந்து கொண்டு எல்லா சுக போகங்களையும், பதவிகளையும் அனுபவித்து விட்டு இப்போது உண்ட வீட்டுக்கே துரோகம் இழைக்கின்றார் என அவர்கள் முத்து பழனியப்பனை சாடினர்.

#TamilSchoolmychoice

அதனைத் தொடர்ந்து நெகிரி மந்திரிபுசாரும், முத்து பழனியப்பனுக்கு ம.இ.கா மூலமாக பல நிலங்கள் வழங்கப்பட்டன என்றும் அதையெல்லாம் அனுபவித்து விட்டு இன்னும் அவருக்கு என்ன வேண்டும் என்றும கூறி நிலம் வழங்கப்பட்ட விவகாரத்தை போட்டுடைத்தார்.

பிகேஆர் கட்சியிலும் எதிர்ப்பு

இதற்கிடையில் தான் சேர்ந்து கொண்ட பிகேஆர் கட்சியிலும் முத்துப் பழனியப்பனை நோக்கி எதிர்ப்புக் கணைகள் பாய்ந்துள்ளன.

முத்து பழனியப்பன் தெலுக் கெமாங் நாடாளுமன்றத் தொகுதி அல்லது  சட்டமன்ற தொகுதி ஒன்றில் போட்டியிட ஆர்வம் காட்டுவதோடு அது பற்றி பகிரங்கமாக பேசியும் வருகின்றார்.

இதனால் பிகேஆர் கட்சியில் ஏற்கனவே பல்லாண்டுகளாக அரசியல் நடத்தி வரும் நெகிரி மாநில இந்திய தலைவர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற பதவிகளுக்கு குறி வைத்திருப்பவர்களும் ஆத்திரம் அடைந்திருக்கின்றார்கள்.

பல்லாண்டுகளாக பிகேஆர் கட்சியில் இருந்து கொண்டு ம.இ.காவை எதிர்த்தும் தேசிய முன்னணியை எதிர்த்தும் தாங்கள் அரசியல் நடத்திக் கொண்டிருக்க, நேற்றுவரை ம.இ.காவில் இருந்து எல்லாவற்றையும் அனுபவித்து விட்டு, இப்போது கடைசி நேரத்தில் தங்கள் வாகனத்திற்கு தாவியுள்ள முத்து பழனியப்பன், உடனடியாக பதவி கேட்பதா என பிகேஆர் கட்சியில் உள்ளவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளார்கள்.

70 வயதுக்கும் மேலாகிவிட்ட முத்து பழனியப்பனுக்கு இன்னும் ஏன் பதவி ஆசை, அப்படியே கொடுத்தாலும் அவரால் செயல்பட முடியுமா என அவர் மீது கேள்விக் கணைகள் பாயத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக போர்ட்டிக்சன் சட்டமன்ற உறுப்பினர் எம்.ரவி நேரடியாகவே  பல தருணங்களில் முத்துப் பழனியப்பனுக்கு எதிராக பேசியிருக்கின்றார்.

இதற்கிடையில் தெலுக் கெமாங் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள தானா மேரா தோட்டத்தில் உள்ள மாரியம்மன் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் முத்து பழனியப்பன் கலந்து கொண்டபோது அங்கே சில சலசலப்புகளும், சர்ச்சைகளும் அரங்கேற்றம் கண்டதாக தகவல்கள் கூறுகின்றன.

சட்டமன்ற உறுப்பினர் எம்.ரவி மற்றும் தெலுக் கெமாங் நாடாளுமன்ற உறுப்பினர் கமாருல் ஆகியோருடன் இந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட முத்து பழனியப்பன் தானா மேரா தோட்ட மக்களுக்கு வீடு கட்டித் தரப்படும் என வாக்குறுதி வழங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர், இத்தனை நாளாக  அரசியலில் இருந்து கொண்டு இப்போது வந்து ஏன் இப்படி திடீர் அக்கறையோடு எங்களுக்கு வாக்குறுதிகள் வழங்குகிறீர்கள் என கேள்விக் கணைகளை தொடுத்ததாகவும் அதனால் சலசலப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிகின்றது.

பிகேஆர் கட்சியில் சேர்ந்துவிட்டு, வயதான காலத்தில் இப்படியாக நாலா பக்கமும் இடிபட்டுக் கொண்டும் தடுமாறிக் கொண்டும் இருக்கின்றார் முத்து பழனியப்பன்!