Home இந்தியா காங்கிரஸ் துணைத் தலைவராக ராகுல் காந்தி நியமனம்!

காங்கிரஸ் துணைத் தலைவராக ராகுல் காந்தி நியமனம்!

951
0
SHARE
Ad

imagesஜனவரி 21 – துணைத் தலைவர்களை நியமிப்பது காங்கிரஸ் கட்சியில் புதிதல்ல. ஆனால், ராகுல் காந்தி துணைத் தலைவராக்கப்பட்டிருப்பது சற்று வித்தியாசமானது.

அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான முன்னோட்டம்தான் இது என்று கொள்ளலாம்.
ஜெய்ப்பூரில் நடந்த அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் சுய விமர்சன விவாதத்தின் முடிவில், காங்கிரஸ் கட்சியை எதிர்நோக்கியுள்ள இரண்டு பெரிய சவால்களைக் கட்சித் தலைமை திடீரென்று உணர்ந்து, அவற்றை எதிர்கொள்வதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறது. அந்த இரண்டு சவால்கள் என்னவென்று தெரியுமா?

இளைஞர்கள் மத்தியில், ஆட்சி அதிகாரத்தில் தங்களுக்குப் பங்கில்லை என்பதும், அரசும் நிர்வாகமும் மக்கள் பிரச்னைகளைப் பற்றிய கவலையே இல்லாமல் இருக்கிறது என்கிற கோபம் எழுந்திருப்பதும் முதலாவது சவால்.

#TamilSchoolmychoice

இதற்கு, காங்கிரஸ் தலைமை கண்டுபிடித்திருக்கும் மருந்து, 43 வயது இளைஞர் ராகுல் காந்தியைத் துணைத் தலைவராக்கி முன்னிலைப்படுத்துவதுடன், கட்சியிலும் ஆட்சியிலும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது.

இரண்டாவது சவால், நகர்ப்புற, நடுத்தர வர்க்கத்தினருக்குக் காங்கிரஸ் கட்சியின் மீதும், ஆளும் அரசியல் வர்க்கத்தின் மீதும் ஏற்பட்டிருக்கும் கோபமும் வெறுப்பும். அதை உணர்ந்திருப்பதாகச் சொல்வதன் மூலம், மத்தியதர வகுப்பினரின் உணர்வுகளைப் பிரதிபலித்து அதனால் அவர்களது ஆதரவைப் பெற்று விடலாம் என்பதுதான் இரண்டாவது சவாலுக்குக் காங்கிரஸ் தலைமை கண்டுபிடித்திருக்கும் தீர்வு.

இளைஞர்களை அரசியலுக்கு அழைத்து வர வேண்டும் என்கிற கோஷம் சரி. ஆனால், அந்த இளைஞர்கள் அனைவரும் வம்சாவளி வாரிசுகளாக இருந்தால் எப்படி?

கட்சியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது சரி. ஆனால், அடிப்படைத் தேர்தல் நடத்தப்படாமல், கட்சியின் கிளைகள் அனைத்துமே நியமன முறையில் செயல்படும்போது கட்சிக்கு உயிர்ப்பும், சுறுசுறுப்பும் ஏற்படுத்துவது எப்படி?

காங்கிரஸ் கட்சி என்பது அடிமட்டத் தொண்டர்களே இல்லாத, முறையான கட்சி அமைப்பே இல்லாத இயக்கமாக மாறிவிட்டிருக்கிறது. அதற்குத் தேவை அமைப்புரீதியான அடிப்படை மாற்றமே தவிர, தலைமை மாற்றமோ, இளைய தலைவர்களின் அதிகரித்த ஈடுபாடோ அல்ல.