இந்தோனிசியாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டதால் அதிக பணிச்சுமை காரணமாக 270-க்கும் மேற்பட்ட தேர்தல் அலுவலர்கள் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது நடைபெற்றுவரும் வாக்கு எண்ணும் பணியில் இருப்பவர்கள் பலர் உடல் நலக்குறைவுக்கு ஆளாகியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி அதிபர் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற்றன. தேர்தல் செலவினைக் குறைப்பதற்காக ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.
கடந்த சனிக்கிழமை நிலவரப்படி இந்த வாக்குச் சீட்டுகளை எண்ணும் அலுவலர்களில் 272 பேர் உயிரிழந்துவிட்டனர் என்றும் மேலும் 1,878 பேர் உடல்நலம் குன்றியிருப்பதாகவும் இந்தோனிசியாவின் பொதுத் தேர்தல் ஆணையத் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.